حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ جَابِرٍ قَالَ :
كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي فَيَؤُمُّ قَوْمَهُ فَصَلَّى لَيْلَةً مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ ثُمَّ أَتَى قَوْمَهُ فَأَمَّهُمْ فَافْتَتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ فَانْحَرَفَ رَجُلٌ فَسَلَّمَ ثُمَّ صَلَّى وَحْدَهُ وَانْصَرَفَ فَقَالُوا لَهُ أَنَافَقْتَ يَا فُلَانُ قَالَ لَا وَاللَّهِ وَلَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأُخْبِرَنَّهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَصْحَابُ نَوَاضِحَ نَعْمَلُ بِالنَّهَارِ وَإِنَّ مُعَاذًا صَلَّى مَعَكَ الْعِشَاءَ ثُمَّ أَتَى فَافْتَتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مُعَاذٍ فَقَالَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ اقْرَأْ بِكَذَا وَاقْرَأْ بِكَذَا قَالَ سُفْيَانُ فَقُلْتُ لِعَمْرٍو إِنَّ أَبَا الزُّبَيْرِ حَدَّثَنَا عَنْ جَابِرٍ أَنَّهُ قَالَ اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى فَقَالَ عَمْرٌو نَحْوَ هَذَا
நபி (ஸல்) அவர்களுடன் முஆத் பின் ஜபல் (ரலி) தொழுதார். பிறகு (தம் கூட்டத்தாரிடம்) சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை (மீண்டும்) தம் கூட்டத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கும் வழக்கமுடையோராக இருந்தார்.
ஒருநாள் இரவில் முஆத் (ரலி), நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு(அதே தொழுகையை)த் தொழுவித்தார்கள். அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதத் தொடங்கியபோது ஒருவர் (தொழுகையிலிருந்து) விலகி ஸலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுது முடித்தார். மக்கள் அவரிடம், “இன்னாரே! நீர் முனாஃபிக் ஆகிவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை. நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன்” எனக் கூறினார்.
அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் வேளைகளில் ஒட்டகங்களை ஓட்டி, தண்ணீர் பாய்ச்சும் உழைப்பாளிகள். இந்நிலையில் முஆத் பின் ஜபல் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, “முஆதே! நீ குழப்பவாதியா?” என்று கேட்டுவிட்டு “(நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சிறு அத்தியாயங்களான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக, இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக” என்று அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
“நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரிப்னு தீனார் (ரஹ்) அவர்களிடம் (நபி (ஸல்)), ‘வஷ்ஷம்ஸி வளுஹாஹா(91), வள்ளுஹா(93), வல்லைலி இதா யக்’ஷா(92), ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா(87) ஆகிய அத்தியாயங்களை ஓதுவீராக!’ என்று (முஆத் (ரலி) அவர்களிடம் அத்தியாயப் பெயர்களைக்) கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) எமக்கு அறித்தார்களே? என்று கேட்டேன். அதற்கு அம்ரிப்னு தீனார் (ரஹ்), (ஆம்) இது போன்றுதான் (அறிவித்தார்கள்) என்றார்கள்” என்பதாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.