அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4219

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ قَالَ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ فَأَتَيْنَا وَادِيَ الْقُرَى عَلَى حَدِيقَةٍ لاِمْرَأَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اخْرُصُوهَا ‏”‏ ‏.‏ فَخَرَصْنَاهَا وَخَرَصَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَةَ أَوْسُقٍ وَقَالَ ‏”‏ أَحْصِيهَا حَتَّى نَرْجِعَ إِلَيْكِ إِنْ شَاءَ اللَّهُ ‏”‏ ‏.‏ وَانْطَلَقْنَا حَتَّى قَدِمْنَا تَبُوكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ سَتَهُبُّ عَلَيْكُمُ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلاَ يَقُمْ فِيهَا أَحَدٌ مِنْكُمْ فَمَنْ كَانَ لَهُ بَعِيرٌ فَلْيَشُدَّ عِقَالَهُ ‏”‏ ‏.‏ فَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ فَقَامَ رَجُلٌ فَحَمَلَتْهُ الرِّيحُ حَتَّى أَلْقَتْهُ بِجَبَلَىْ طَيِّئٍ وَجَاءَ رَسُولُ ابْنِ الْعَلْمَاءِ صَاحِبِ أَيْلَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِكِتَابٍ وَأَهْدَى لَهُ بَغْلَةً بَيْضَاءَ فَكَتَبَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْدَى لَهُ بُرْدًا ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِيَ الْقُرَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَرْأَةَ عَنْ حَدِيقَتِهَا ‏”‏ كَمْ بَلَغَ ثَمَرُهَا ‏”‏ ‏.‏ فَقَالَتْ عَشَرَةَ أَوْسُقٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنِّي مُسْرِعٌ فَمَنْ شَاءَ مِنْكُمْ فَلْيُسْرِعْ مَعِيَ وَمَنْ شَاءَ فَلْيَمْكُثْ ‏”‏ ‏.‏ فَخَرَجْنَا حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَقَالَ ‏”‏ هَذِهِ طَابَةُ وَهَذَا أُحُدٌ وَهُوَ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ إِنَّ خَيْرَ دُورِ الأَنْصَارِ دَارُ بَنِي النَّجَّارِ ثُمَّ دَارُ بَنِي عَبْدِ الأَشْهَلِ ثُمَّ دَارُ بَنِي عَبْدِ الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ثُمَّ دَارُ بَنِي سَاعِدَةَ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏”‏ ‏.‏ فَلَحِقَنَا سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ أَبُو أُسَيْدٍ أَلَمْ تَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَيَّرَ دُورَ الأَنْصَارِ فَجَعَلَنَا آخِرًا ‏.‏ فَأَدْرَكَ سَعْدٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ خَيَّرْتَ دُورَ الأَنْصَارِ فَجَعَلْتَنَا آخِرًا ‏.‏ فَقَالَ ‏”‏ أَوَلَيْسَ بِحَسْبِكُمْ أَنْ تَكُونُوا مِنَ الْخِيَارِ ‏”‏ ‏


حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ، قَالاَ حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ ‏ “‏ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ مِنْ قِصَّةِ سَعْدِ بْنِ عُبَادَةَ وَزَادَ فِي حَدِيثِ وُهَيْبٍ فَكَتَبَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبَحْرِهِمْ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ وُهَيْبٍ فَكَتَبَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்பயணத்தில் நாங்கள் ‘வாதில் குரா’ எனுமிடத்திலிருந்த ஒரு பெண்மணிக்குச் சொந்தமான ஒரு (பேரீச்சந்)தோட்டத்தை அடைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “மரத்திலுள்ள கனிகளை மதிப்பிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் மதிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதில் பத்து ‘வஸ்கு’ கனிகள் இருப்பதாக மதிப்பிட்டார்கள். மேலும் அப்பெண்ணிடம், “இன்ஷா அல்லாஹ், நாங்கள் திரும்பி வருவதற்குள் இக்கனிகளை நீ எண்ணி வை” என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் நடந்து தபூக்கிற்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும்” என்று கூறினார்கள்.

அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது. அப்போது எங்களில் ஒருவர் எழுந்தார். அக்காற்று அவரைத் தூக்கிச் சென்று, ‘தய்யி’ குலத்தாரின் (‘அஜா’ மற்றும் ‘ஸல்மா’ ஆகிய) இரு மலைகளுக்கிடையே போட்டுவிட்டது.

பின்னர் ‘அய்லா’ நாட்டின் அரசர் இப்னுல் அல்மாவின் தூதுவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கடிதத்துடன் வந்தார். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அய்லா அரசர் சார்பாக) வெள்ளைக் கோவேறு கழுதையொன்றையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அய்லா அரசருக்கு) பதில் கடிதம் எழுதினார்கள்; மேலும், போர்வையொன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்கள்.

பிறகு நாங்கள் திரும்பி ‘வாதில் குரா’ சென்றடைந்தோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பெண்ணிடம் அவளது தோட்டத்திலிருந்த பேரீச்சங்கனிகளைப் பற்றிக் கேட்டார்கள். “அதில் எவ்வளவு கனிகள் உள்ளன?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் “பத்து வஸ்க்குகள்” என்று பதிலளித்தாள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் விரைவாக (மதீனாவுக்குச்) செல்லப் போகிறேன். உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைவாக வரலாம்; விரும்பியவர் இங்குத் தங்கி வரலாம்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் புறப்பட்டு மதீனா அருகில் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது தாபா (தூய நகரம்); இதோ உஹுத் மலை; அது நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று கூறினார்கள்.

பிறகு “அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது ‘பனுந் நஜ்ஜார்’ குடும்பமாகும். பிறகு ‘பனூ அப்தில் அஷ்ஹல்’ குடும்பமாகும். பிறகு ‘பனூ அப்தில் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்’ குடும்பமாகும். பிறகு ‘பனூ ஸாஇதா’ குடும்பமாகும். அன்ஸாரிக் கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று சொன்னார்கள்.

பிறகு (பனூ ஸாஇதா குடும்பத்தைச் சேர்ந்த) ஸஅத் பின் உபாதா (ரலி) எங்களிடம் வந்தார்கள். அப்போது அபூஉஸைத் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகச் சொல்லிவிட்டு, (பனூ ஸாஇதா குடும்பத்தாரான) நம்மை இறுதியாகவே குறிப்பிட்டதை நீங்கள் கவனித்தீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனே ஸஅத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அன்ஸாரிக் கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகத் நீங்கள் குறிப்பிட்டுவிட்டு, எங்களை இறுதியில்  குறிப்பிட்டுள்ளீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் மிகச் சிறந்(த குடும்பத்)தவர்களில் இடம்பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)


குறிப்பு :

அல் முகைரா பின் ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள ஸஅத் பின் உபாதா (ரலி) தொடர்பான தகவல் இடம்பெறவில்லை.

உஹைப் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அய்லா அரசருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் கடிதம் எழுதினார்கள்” என்று இடம்பெறாமல், “அவர்களின் ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடிதம் எழுதினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4218

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، – وَهُوَ ابْنُ أَنَسٍ – عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ أَنَّ أَبَا الطُّفَيْلِ، عَامِرَ بْنَ وَاثِلَةَ أَخْبَرَهُ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يَجْمَعُ الصَّلاَةَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا حَتَّى إِذَا كَانَ يَوْمًا أَخَّرَ الصَّلاَةَ ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ دَخَلَ ثُمَّ خَرَجَ بَعْدَ ذَلِكَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا ثُمَّ قَالَ ‏”‏ إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِيَ النَّهَارُ فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلاَ يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِيَ ‏”‏ ‏.‏ فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلاَنِ وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَىْءٍ مِنْ مَاءٍ – قَالَ – فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ‏”‏ ‏.‏ قَالاَ نَعَمْ ‏.‏ فَسَبَّهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ – قَالَ – ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلاً قَلِيلاً حَتَّى اجْتَمَعَ فِي شَىْءٍ – قَالَ – وَغَسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ ثُمَّ أَعَادَهُ فِيهَا فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ أَوْ قَالَ غَزِيرٍ – شَكَّ أَبُو عَلِيٍّ أَيُّهُمَا قَالَ – حَتَّى اسْتَقَى النَّاسُ ثُمَّ قَالَ ‏”‏ يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَا هُنَا قَدْ مُلِئَ جِنَانًا ‏”‏ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தபூக்’ போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் (இரு நேரத்) தொழுகைகளை (ஒரே நேரத்தில்) சேர்த்துத் தொழுதுவந்தார்கள்; லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

பின்பொரு நாள் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டு, பிறகு வெளிவந்து, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுத பிறகு சென்றுவிட்டு, பிறகு வந்து மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

பிறகு, “அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் நீரூற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்குமுன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்குமுன் உங்களில் எவரும் அங்குச் சென்றுவிட்டால், அங்குள்ள நீரில் கை வைத்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே நாங்கள் அங்குச் சென்றோம். அப்போது இருவர் எங்களை முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் நீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்துசேர்ந்தார்கள்.) இருவரிடமும் “அதன் நீரில் கை வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “ஆம்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விருவரையும் கண்டித்தார்கள். அவ்விருவரிடமும் சொல்ல வேண்டுமென அல்லாஹ் நாடியதையெல்லாம் சொன்னார்கள்.

பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாக நீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தத் நீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்த நீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு (அ) நிறைந்து ஓடியது. மக்கள்  அனைவரும் நீர் அருந்தினர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆதே! (எனக்குப் பிறகு) நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால், இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்” என்று (முன்னறிவிப்பாகக்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஅலீ (ரஹ்), “ஊற்றிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு (அ) நிறைந்து ஓடியது என்று ஐயத்துடன் அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4217

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَطْعِمُهُ فَأَطْعَمَهُ شَطْرَ وَسْقِ شَعِيرٍ فَمَا زَالَ الرَّجُلُ يَأْكُلُ مِنْهُ وَامْرَأَتُهُ وَضَيْفُهُمَا حَتَّى كَالَهُ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ لَوْ لَمْ تَكِلْهُ لأَكَلْتُمْ مِنْهُ وَلَقَامَ لَكُمْ ‏”‏ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவுப் பொருட்கள் வழங்குமாறு கோரினார். அவரது உணவுக்காக நபி (ஸல்) அரை ‘வஸ்கு’ கோதுமை வழங்கினார்கள். அதிலிருந்து அவரும் அவருடைய துணைவியும் அவர்களுடைய விருந்தினரும் உண்டு வந்தனர். இறுதியில் ஒரு நாள் அவர் அந்தக் கோதுமையை நிறுத்துப் பார்த்தார்.

(அதிலிருந்த கோதுமை தீர்ந்துவிட்டது.) ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்), “அதை நீ நிறுத்துப் பார்த்திருக்காவிட்டால் அதிலிருந்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்திருப்பீர்கள். உங்களுக்காக அதில் எப்போதும் உணவுப் பொருள் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4216

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ أُمَّ مَالِكٍ، كَانَتْ تُهْدِي لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فِي عُكَّةٍ لَهَا سَمْنًا فَيَأْتِيهَا بَنُوهَا فَيَسْأَلُونَ الأُدْمَ وَلَيْسَ عِنْدَهُمْ شَىْءٌ فَتَعْمِدُ إِلَى الَّذِي كَانَتْ تُهْدِي فِيهِ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَتَجِدُ فِيهِ سَمْنًا فَمَا زَالَ يُقِيمُ لَهَا أُدْمَ بَيْتِهَا حَتَّى عَصَرَتْهُ فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ عَصَرْتِيهَا ‏”‏ ‏.‏ قَالَتْ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ لَوْ تَرَكْتِيهَا مَا زَالَ قَائِمًا ‏”‏

உம்மு மாலிக் அல்அன்ஸாரிய்யா (ரலி), தமது நெய்ப்பை ஒன்றில் நபி (ஸல்) அவர்களுக்கு நெய்யை அன்பளிப்பா(கக் கொடுத்தனுப்புவா)ர். பிறகு அவரிடம் அவருடைய மக்கள் வந்து (ரொட்டிக்காகக்) குழம்பு கேட்பார்கள். அப்போது அவர்களிடம் எதுவும் இருக்காது. உடனே உம்மு மாலிக் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு நெய் கொடுத்தனுப்பும் (அந்தப் பையில் ஏதேனும் மீதி இருக்கும் என்று எண்ணி) அந்தப் பையை நோக்கிச் செல்வார்கள். அதில் நெய் இருக்கும். இவ்வாறே அவர் அந்தப் பையைப் பிழியும்வரை வீட்டுக்குத் தேவையான குழம்பு அதில் இருந்து கொண்டே இருந்தது.

(இறுதியில் அந்தப் பையைப் பிழிந்தபோது நெய் இல்லாமற் போய்விட்டதால்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்), “அந்தப் பையை நீ பிழிந்தாயா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்“ என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்), “அதை அப்படியே நீ விட்டிருந்தால் அதில் எப்போதும் நெய் இருந்துகொண்டிருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4215

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ، – يَعْنِي ابْنَ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ :‏

أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ بِالزَّوْرَاءِ – قَالَ وَالزَّوْرَاءُ بِالْمَدِينَةِ عِنْدَ السُّوقِ وَالْمَسْجِدِ فِيمَا ثَمَّهْ – دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَوَضَعَ كَفَّهُ فِيهِ فَجَعَلَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ جَمِيعُ أَصْحَابِهِ ‏.‏ قَالَ قُلْتُ كَمْ كَانُوا يَا أَبَا حَمْزَةَ قَالَ كَانُوا زُهَاءَ الثَّلاَثِمِائَةِ ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ بِالزَّوْرَاءِ فَأُتِيَ بِإِنَاءِ مَاءٍ لاَ يَغْمُرُ أَصَابِعَهُ أَوْ قَدْرَ مَا يُوَارِي أَصَابِعَهُ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ هِشَامٍ ‏

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ஒரு முறை) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் இருந்தார்கள். -அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்- அப்போது நபி (ஸல்) (உளூச் செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது நீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து நீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து உளூச் செய்தனர்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அபூஹம்ஸா! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “சுமார் முந்நூறு பேர் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) (மதீனாவிலுள்ள) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் அவர்களின் விரல்களை(முக்கினால் அவற்றை)க்கூட மறைக்காத அளவுக்கு, (அ) விரல்களை மட்டுமே மறைக்கும் அளவுக்கு (சிறிது) நீர் இருந்த (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4214

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ – قَالَ – فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ ‏

அஸ்ருத் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட ஒரு நாளில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். உளூச் செய்ய மக்கள் நீரைத் தேடினர். அவர்களுக்கு நீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உளூ செய்யச் சிறிது நீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். பிறகு அதிலிருந்து உளூச் செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து நீர் சுரந்து வருவதை நான் கண்டேன். மக்கள் அதிலிருந்து உளூச் செய்தனர். எந்த அளவுக் கென்றால், அவர்களில் கடைசி ஆள்வரை அனைவரும் (அதிலேயே) உளூச் செய்து முடித்தனர்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4213

وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَعَا بِمَاءٍ فَأُتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ فَجَعَلَ الْقَوْمُ يَتَوَضَّئُونَ فَحَزَرْتُ مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الثَّمَانِينَ – قَالَ – فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ ‏

நபி (ஸல்) (ஒரு முறை) நீர் (பாத்திரத்தைக்) கொண்டுவரச் சொன்னபோது, (உட்பகுதி குறுகலான) வாயகன்ற (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (நபி (ஸல்) பாத்திரத்திற்குள் தம் விரல்களை நுழைத்தார்கள்) மக்கள் அதிலிருந்து உளூச் செய்யலாயினர். நான் எண்ணிக் கணக்கிட்டுப்பார்த்தேன். அவர்கள் அறுபதிலிருந்து எண்பது பேர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து நீர் சுரப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)