அத்தியாயம்: 43, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4225

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سَلِيمٌ، عَنْ سَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا فَجَعَلَ الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ وَأَنْتُمْ تَفَلَّتُونَ مِنْ يَدِي ‏”‏

“உங்களுக்கான எனது நிலை, (வெளிச்சத்துக்காகத்) தீ மூட்டிய ஒருவரின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் வெட்டுக்கிளிகளும் விட்டில் பூச்சிகளும் விழலாயின. அவர் அதி(ல் விழுவதி)லிருந்து அவற்றைத் தடுத்துக்கொண்டிருந்தார். (இவ்வாறுதான்) நரக நெருப்பி(ல் விழுவதி)லிருந்து (உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், எனது கையிலிருந்து நீங்கள் நழுவிக்(கொண்டு நெருப்பை நோக்கி ஓடிக்)கொண்டிருக்கிறீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4224

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَثَلِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهَا جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي فِي النَّارِ يَقَعْنَ فِيهَا وَجَعَلَ يَحْجُزُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَتَقَحَّمْنَ فِيهَا قَالَ فَذَلِكُمْ مَثَلِي وَمَثَلُكُمْ أَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ فَتَغْلِبُونِي تَقَحَّمُونَ فِيهَا ‏”‏

“எனது நிலை, (வெளிச்சத்துக்காகத்) தீ மூட்டிய ஒருவரின் நிலையை ஒத்திருக்கிறது. அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது நெருப்பைச் சுற்றும் விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அவரோ அவற்றை(த் தீயில் விழ விடாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரையும் மீறி அவை தீயில் விழுகின்றன.

இதுதான் எனது நிலையும் உங்களது நிலையும் ஆகும். (நரக) நெருப்பி(ல் விழுவதி)லிருந்து உங்களைத் தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கின்றேன். “நெருப்பிலிருந்து விலகி வாருங்கள். நெருப்பிலிருந்து விலகி வாருங்கள்’ என்று சொல்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை மீறி நரகத்தில் விழுந்துகொண்டிருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 43, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4223

 وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ أُمَّتِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَجَعَلَتِ الدَّوَابُّ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهِ فَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ وَأَنْتُمْ تَقَحَّمُونَ فِيهِ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

“எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் (வெளிச்சத்துக்காகத்) தீ மூட்டிய ஒருவரின் நிலையை ஒத்திருக்கிறது. விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்து(த் தடுத்து)க் கொண்டிருக்கின்றேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் விழுந்துகொண்டிருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4222

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ مَثَلِي وَمَثَلَ مَا بَعَثَنِيَ اللَّهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمَهُ فَقَالَ يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَىَّ وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ فَالنَّجَاءَ ‏.‏ فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَأَدْلَجُوا فَانْطَلَقُوا عَلَى مُهْلَتِهِمْ وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ فَصَبَّحَهُمُ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي وَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ مَا جِئْتُ بِهِ مِنَ الْحَقِّ ‏”‏‏

“எனக்கும், என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் உவமை என்பது, ஒருவர் தம் சமூகத்தாரிடம் சென்று, ‘என் சமுதாயமே! நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (அப்படை எந்நேரமும் உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை) நான் நிர்வாணமாக (ஓடி)வந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே, தப்பித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியவரின் நிலையைப் போன்றதாகும்.

அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்து, காலையிலும் அங்கேயே தங்கியிருந்தனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.

இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)