அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5243

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، حَدَّثَنِي أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عُبَيْدٍ الْمُكْتِبِ، عَنْ فُضَيْلٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَضَحِكَ فَقَالَ ‏”‏ هَلْ تَدْرُونَ مِمَّ أَضْحَكُ ‏”‏ ‏.‏ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏”‏ مِنْ مُخَاطَبَةِ الْعَبْدِ رَبَّهُ يَقُولُ يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنَ الظُّلْمِ قَالَ يَقُولُ بَلَى ‏.‏ قَالَ فَيَقُولُ فَإِنِّي لاَ أُجِيزُ عَلَى نَفْسِي إِلاَّ شَاهِدًا مِنِّي قَالَ فَيَقُولُ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا – قَالَ – فَيُخْتَمُ عَلَى فِيهِ فَيُقَالُ لأَرْكَانِهِ انْطِقِي ‏.‏ قَالَ فَتَنْطِقُ بِأَعْمَالِهِ – قَالَ – ثُمَّ يُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ الْكَلاَمِ – قَالَ – فَيَقُولُ بُعْدًا لَكُنَّ وَسُحْقًا ‏.‏ فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ ‏”‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் சிரித்துவிட்டு, “நான் எதற்காகச் சிரித்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஓர் அடியான் தன் இறைவனுடன் (மறுமை நாளில்) உரையாடுவது குறித்(து நினைத்)தே (சிரித்தேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அடியான் (தன் இறைவனிடம்), “என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?” என்று கேட்பான்.

அதற்கு இறைவன், “ஆம்” என்பான். அடியான், “அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறுவான்.

அதற்கு இறைவன், “இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்” என்பான். பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனுடைய உறுப்புகளிடம், “பேசுங்கள்” என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.

பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், “உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத்தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்” என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5242

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ ‏”‏ هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ فِي الظَّهِيرَةِ لَيْسَتْ فِي سَحَابَةٍ ‏”‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَهَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ فِي سَحَابَةٍ ‏”‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تُضَارُّونَ فِي رُؤْيَةِ رَبِّكُمْ إِلاَّ كَمَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا – قَالَ – فَيَلْقَى الْعَبْدَ فَيَقُولُ أَىْ فُلْ أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ فَيَقُولُ بَلَى ‏.‏ قَالَ فَيَقُولُ أَفَظَنَنْتَ أَنَّكَ مُلاَقِيَّ فَيَقُولُ لاَ ‏.‏ فَيَقُولُ فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ‏.‏ ثُمَّ يَلْقَى الثَّانِيَ فَيَقُولُ أَىْ فُلْ أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ فَيَقُولُ بَلَى أَىْ رَبِّ ‏.‏ فَيَقُولُ أَفَظَنَنْتَ أَنَّكَ مُلاَقِيَّ فَيَقُولُ لاَ ‏.‏ فَيَقُولُ فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ‏.‏ ثُمَّ يَلْقَى الثَّالِثَ فَيَقُولُ لَهُ مِثْلَ ذَلِكَ فَيَقُولُ يَا رَبِّ آمَنْتُ بِكَ وَبِكِتَابِكَ وَبِرُسُلِكَ وَصَلَّيْتُ وَصُمْتُ وَتَصَدَّقْتُ ‏.‏ وَيُثْنِي بِخَيْرٍ مَا اسْتَطَاعَ فَيَقُولُ هَا هُنَا إِذًا – قَالَ – ثُمَّ يُقَالُ لَهُ الآنَ نَبْعَثُ شَاهِدَنَا عَلَيْكَ ‏.‏ وَيَتَفَكَّرُ فِي نَفْسِهِ مَنْ ذَا الَّذِي يَشْهَدُ عَلَىَّ فَيُخْتَمُ عَلَى فِيهِ وَيُقَالُ لِفَخِذِهِ وَلَحْمِهِ وَعِظَامِهِ انْطِقِي فَتَنْطِقُ فَخِذُهُ وَلَحْمُهُ وَعِظَامُهُ بِعَمَلِهِ وَذَلِكَ لِيُعْذِرَ مِنْ نَفْسِهِ ‏.‏ وَذَلِكَ الْمُنَافِقُ وَذَلِكَ الَّذِي يَسْخَطُ اللَّهُ عَلَيْهِ ‏”‏

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள், “இல்லை” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் நிலவைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், “ஆம்” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என நினைத்தாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகின்றேன்” என்பான்.

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என நினைத்தாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகின்றேன்” என்பான்.

பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தான-தர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளால் இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகின்றோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து, “பேசுங்கள்” என்று சொல்லப்படும்.

அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5241

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ عَنْ خَالِدِ بْنِ عُمَيْرٍ قَالَ :‏

سَمِعْتُ عُتْبَةَ بْنَ غَزْوَانَ، يَقُولُ لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا طَعَامُنَا إِلاَّ وَرَقُ الْحُبْلَةِ حَتَّى قَرِحَتْ أَشْدَاقُنَا

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். உண்பதற்கு ‘ஹுப்லா’ எனும் (முள்) மரத்தின் இலையே எங்களின் உணவாக இருந்தது. அதனால் எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது” என்று உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) வழியாக காலித் பின் உமைர் (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5240

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، عَنْ خَالِدِ بْنِ عُمَيْرٍ الْعَدَوِيِّ قَالَ :‏

خَطَبَنَا عُتْبَةُ بْنُ غَزْوَانَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ الدُّنْيَا قَدْ آذَنَتْ بِصُرْمٍ وَوَلَّتْ حَذَّاءَ وَلَمْ يَبْقَ مِنْهَا إِلاَّ صُبَابَةٌ كَصُبَابَةِ الإِنَاءِ يَتَصَابُّهَا صَاحِبُهَا وَإِنَّكُمْ مُنْتَقِلُونَ مِنْهَا إِلَى دَارٍ لاَ زَوَالَ لَهَا فَانْتَقِلُوا بِخَيْرِ مَا بِحَضْرَتِكُمْ فَإِنَّهُ قَدْ ذُكِرَ لَنَا أَنَّ الْحَجَرَ يُلْقَى مِنْ شَفَةِ جَهَنَّمَ فَيَهْوِي فِيهَا سَبْعِينَ عَامًا لاَ يُدْرِكُ لَهَا قَعْرًا وَوَاللَّهِ لَتُمْلأَنَّ أَفَعَجِبْتُمْ وَلَقَدْ ذُكِرَ لَنَا أَنَّ مَا بَيْنَ مِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ مَسِيرَةُ أَرْبَعِينَ سَنَةً وَلَيَأْتِيَنَّ عَلَيْهَا يَوْمٌ وَهُوَ كَظِيظٌ مِنَ الزِّحَامِ وَلَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الشَّجَرِ حَتَّى قَرِحَتْ أَشْدَاقُنَا فَالْتَقَطْتُ بُرْدَةً فَشَقَقْتُهَا بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ مَالِكٍ فَاتَّزَرْتُ بِنِصْفِهَا وَاتَّزَرَ سَعْدٌ بِنِصْفِهَا فَمَا أَصْبَحَ الْيَوْمَ مِنَّا أَحَدٌ إِلاَّ أَصْبَحَ أَمِيرًا عَلَى مِصْرٍ مِنَ الأَمْصَارِ وَإِنِّي أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ فِي نَفْسِي عَظِيمًا وَعِنْدَ اللَّهِ صَغِيرًا وَإِنَّهَا لَمْ تَكُنْ نُبُوَّةٌ قَطُّ إِلاَّ تَنَاسَخَتْ حَتَّى يَكُونَ آخِرُ عَاقِبَتِهَا مُلْكًا فَسَتَخْبُرُونَ وَتُجَرِّبُونَ الأُمَرَاءَ بَعْدَنَا


وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ عَنْ خَالِدِ بْنِ عُمَيْرٍ، وَقَدْ أَدْرَكَ الْجَاهِلِيَّةَ قَالَ خَطَبَ عُتْبَةُ بْنُ غَزْوَانَ وَكَانَ أَمِيرًا عَلَى الْبَصْرَةِ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ شَيْبَانَ

உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! இந்த உலகம் விடைபெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, விரைவாகத் திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது. பருகிக்கொண்டிருப்பவரின் கோப்பையின் அடியில் எஞ்சியிருக்கும் சிறிதளவு பானத்தைப் போன்றே இவ்வுலகின் தவணை எஞ்சியுள்ளது. நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு நிலையான உலகை நோக்கிச் செல்லப்போகின்றீர்கள்.

எனவே உங்களிடம் உள்ள நற்செயல்களுடனேயே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், “நரகத்தின் விளிம்பிலிருந்து தூக்கிப் போடப்படும் ஒரு கல்லானது, எழுபது ஆண்டுகள் பயணித்தாலும் அதன் அடிப் பாகத்தை அடையாது” என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த நரகம் நிரப்பப்பட்டே தீரும். (இது உங்களுக்கு) ஆச்சரியமளிக்கிறதா?

மேலும், எங்களிடம் “சொர்க்கத்தின் நிலைக் கால்களில் இரு நிலைக் கால்களுக்கிடையேயான தொலைவு என்பது நாற்பதாண்டு பயணத் தொலைவாகும்” என்றும் சொல்லப்பட்டது. நிச்சயமாக ஒரு நாள் அந்தச் சொர்க்கம் மக்கள் திரளால் நிரம்பத்தான் போகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். அப்போது உண்பதற்கு இலை தழைகளைத் தவிர வேறு எந்த உணவும் எங்களுக்கு இருக்கவில்லை. (அதை உண்டதால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.

அப்போது நான் சால்வை ஒன்றைப் பெற்றேன். அதை இரண்டாகக் கிழித்து நானும் ஸஅத் பின் மாலிக் (ரலி) அவர்களும் பங்கிட்டுக்கொண்டோம். அதன் ஒரு பகுதியை நான் கீழங்கியாக அணிந்துகொண்டேன். அதன் மற்றொரு பகுதியை ஸஅத் (ரலி) கீழங்கியாக அணிந்து கொண்டார்கள்.

ஆனால், இன்று எங்களில் ஒருவர் காலைப் பொழுதை அடையும்போது நகரங்களில் ஒன்றுக்கு ஆட்சியர் போலவே காலைப் பொழுதை அடைகின்றார். அல்லாஹ்விடம் நான் சிறியவனாயிருக்க, என் மனத்தில் (என்னைப் பற்றிப்) பெரியவனாக நான் கருதிக்கொள்வதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். (உலகத்தின் மீது பற்றில்லாமல் இருந்த) நபித்துவ(க் கால)ம் முடிந்தே போய்விட்டது. அதன் இறுதிப் பகுதி ஆட்சியதிகாரமாகவே இருக்கும். (இனி) நீங்கள் எங்களுக்குப்பின் ஆட்சித் தலைவர்களிடமிருந்து (சோதனைகளை) அனுபவிப்பீர்கள்.

அறிவிப்பாளர் : உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) வழியாக காலித் பின் உமைர் அல்அதவீ (ரஹ்)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் உமர் பின் ஸலீத் (ரஹ்) வழி அறிவிப்பு, “உத்பா பின் ஃகஸ்வான் (ரலி) உரையாற்றினார்கள். அவர்கள் (அப்போது) பஸ்ராவின் ஆளுநராயிருந்தார்கள்” என்று ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5239

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ سَعْدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَابْنُ بِشْرٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ :‏

وَاللَّهِ إِنِّي لأَوَّلُ رَجُلٍ مِنَ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ وَلَقَدْ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا لَنَا طَعَامٌ نَأْكُلُهُ إِلاَّ وَرَقُ الْحُبْلَةِ وَهَذَا السَّمُرُ حَتَّى إِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الدِّينِ لَقَدْ خِبْتُ إِذًا وَضَلَّ عَمَلِي


وَلَمْ يَقُلِ ابْنُ نُمَيْرٍ إِذًا

وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ حَتَّى إِنْ كَانَ أَحَدُنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الْعَنْزُ مَا يَخْلِطُهُ بِشَىْءٍ

அல்லாஹ்வின் பாதையில் (இஸ்லாமியப் படையில்) அம்பெய்த அரபியரில் நானே முதலாமவன் ஆவேன். (உண்பதற்கு) எங்களுக்கு ’ஹுப்லா’ எனும் (முள்) மரத்தின் இலையையும் கருவேல இலையையும் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருந்த நிலையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (சென்று) அறப்போர் புரிந்து வந்தோம். எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கின்ற(கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்தோம்.

பிறகு (கூஃபாவாசிகளான) பனூ ஸஅத் குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூறி எனது) மார்க்க ஈடுபாடு தொடர்பாக என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் (இதுவரை) நான் செய்துவந்த நற்செயல்(கள் எல்லாம்) வீணாகி, இப்போது நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என வருந்தினேன்).

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், ’இப்போது’ எனும் வார்த்தை இடம்பெறவில்லை.

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணமிடுவதைப் போன்று எதிலும் ஒட்டாத வகையில் மலம் கழித்தோம்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5238

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – قَالَ عَبَّاسٌ حَدَّثَنَا وَقَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا – أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا بُكَيْرُ بْنُ مِسْمَارٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ قَالَ :‏

كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي إِبِلِهِ فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ  أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ فَنَزَلَ فَقَالَ لَهُ أَنَزَلْتَ فِي إِبِلِكَ وَغَنَمِكَ وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ فَقَالَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ ‏”‏

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) தம் ஒட்டகங்களுக்கிடையே இருந்தார்கள். அப்போது அவர்களுடைய மகன் உமர் பின் ஸஅத் (ரஹ்) வந்தார்கள்.

அவரை ஸஅத் (ரலி) அவர்கள் கண்டபோது, “வாகனத்தில் வரும் இந்த மனிதரின் தீமையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். அவர் (வாகனத்திலிருந்து) இறங்கி, “நீங்கள் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்குமிடையே தங்கிவிட்டீர்கள்; ஆட்சியதிகாரத்திற்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ள விட்டுவிட்டீர்கள்” என்று (குறை) கூறினார்.

உடனே, ஸஅத் (ரலி) அவரது நெஞ்சில் அடித்து, “பேசாதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5236

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو مُعَاوِيَةَ ‏”‏ عَلَيْكُمْ ‏”‏

”உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் வழங்கியிருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5235

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ، يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ ‏”‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ أَبِي الزِّنَادِ سَوَاءً

”செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்)பார்க்கட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5234

حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ يَزِيدَ بْنَ رَبَاحٍ – هُوَ أَبُو فِرَاسٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ – حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏”‏ إِذَا فُتِحَتْ عَلَيْكُمْ فَارِسُ وَالرُّومُ أَىُّ قَوْمٍ أَنْتُمْ ‏”‏ ‏.‏ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ نَقُولُ كَمَا أَمَرَنَا اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَوْ غَيْرَ ذَلِكَ تَتَنَافَسُونَ ثُمَّ تَتَحَاسَدُونَ ثُمَّ تَتَدَابَرُونَ ثُمَّ تَتَبَاغَضُونَ أَوْ نَحْوَ ذَلِكَ ثُمَّ تَنْطَلِقُونَ فِي مَسَاكِينِ الْمُهَاجِرِينَ فَتَجْعَلُونَ بَعْضَهُمْ عَلَى رِقَابِ بَعْضٍ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பாரசீகர்களும் ரோமர்களும் உங்களால் வெற்றி கொள்ளப்படும்போது, நீங்கள் எத்தகைய மக்களாய் இருப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி), “அல்லாஹ் எங்களுக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ (அதன்படியே நடந்துகொள்வோம்) அதன்படியே கூறுவோம் (நன்றி கூறி அவனைப் போற்றுவோம்)” என்று விடையளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வேறொன்றும் செய்யமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். பின்னர் “நீங்கள் ஒருவருக்கொருவர் (சுயநலத்துடன்) போட்டி போட்டுக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் குரோதம் கொள்வீர்கள். அல்லது இவற்றைப் போன்றதைச் செய்வீர்கள்” என்று கூறிவிட்டு, “பிறகு ஏழை முஹாஜிர்களை நோக்கிச் சென்று, அவர்களில் சிலருக்கு, சிலர்மீது அதிகாரத்தை வழங்குவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5233

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، – يَعْنِي ابْنَ حَرْمَلَةَ بْنِ عِمْرَانَ التُّجِيبِيَّ – أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ :‏

أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ وَهُوَ حَلِيفُ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَوْا صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ فَتَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ ‏”‏ أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَىْءٍ مِنَ الْبَحْرَيْنِ ‏”‏ ‏.‏ فَقَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ ‏”‏ فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ ‏.‏ وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ ‏”‏


حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ يُونُسَ وَمِثْلِ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ صَالِحٍ ‏ “‏ وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ ‏”‏

பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் உடன்படிக்கை வழி நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்துகொண்டவருமான அம்ரு பின் அவ்ஃபு (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, ஜிஸ்யா (காப்பு) வரி வசூலித்துக் கொண்டுவரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தீ வணங்கிகளாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.

அபூஉபைதா (ரலி) (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) (நிதியுடன்) வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்ஸாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்ஸாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பியவுடன், அன்ஸாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன்” என்றார்கள்.

அதற்கு அன்ஸாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அ(ந்த உலகாசையான)து அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)


குறிப்பு :

ஸாலிஹ் பின் கைஸான் (ரஹ்) வழி அறிவிப்பில், (“அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அழித்துவிடுமோ” என்றில்லாமல்) “அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் திருப்பிவிடுமோ” என்று இடம்பெற்றுள்ளது.