அத்தியாயம்: 12, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1703

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي عُبَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَيْرًا ‏ ‏مَوْلَى ‏ ‏آبِي اللَّحْمِ ‏ ‏قَالَ :‏

‏أَمَرَنِي ‏ ‏مَوْلَايَ ‏ ‏أَنْ أُقَدِّدَ لَحْمًا فَجَاءَنِي مِسْكِينٌ فَأَطْعَمْتُهُ مِنْهُ فَعَلِمَ بِذَلِكَ ‏ ‏مَوْلَايَ ‏ ‏فَضَرَبَنِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَدَعَاهُ فَقَالَ ‏ ‏لِمَ ضَرَبْتَهُ فَقَالَ يُعْطِي طَعَامِي بِغَيْرِ أَنْ آمُرَهُ فَقَالَ الْأَجْرُ بَيْنَكُمَا

என் எஜமானர் என்னிடம் (ஒரு முறை) இறைச்சியை(வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் எஜமானர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் எஜமானரை அழைத்து, “அவரை ஏன் அடித்தீர்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் இவருக்குக் கட்டளையிடாமலேயே எனது உணவை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றார்” என்று பதில் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நற்கூலி உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆபில் லஹ்ம் என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1702

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏آبِي اللَّحْمِ ‏ ‏قَالَ : ‏

‏كُنْتُ مَمْلُوكًا فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَأَتَصَدَّقُ مِنْ مَالِ ‏ ‏مَوَالِيَّ ‏ ‏بِشَيْءٍ قَالَ ‏ ‏نَعَمْ وَالْأَجْرُ بَيْنَكُمَا نِصْفَانِ

நான் அடிமையாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் என் உரிமையாளரின் செல்வத்திலிருந்து எதையேனும் தர்மம் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு “ஆம். உங்கள் இருவருக்கும் சரிபாதி நற்பலன் உண்டு” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆபில் லஹ்ம் என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1701

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَنْفَقَتْ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا وَلَهُ مِثْلُهُ بِمَا اكْتَسَبَ وَلَهَا بِمَا أَنْفَقَتْ ‏ ‏وَلِلْخَازِنِ ‏ ‏مِثْلُ ذَلِكَ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்கூலி உண்டு. அதைப் போன்றே, அவற்றைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்கூலி உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்கூலிகளில் எதுவும் குறைந்துவிடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1700

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَنْفَقَتْ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ ‏ ‏وَلِلْخَازِنِ ‏ ‏مِثْلُ ذَلِكَ لَا يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُضَيْلُ بْنُ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏مِنْ طَعَامِ زَوْجِهَا

ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் அவளுடைய கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஃபுழைல் பின் இயாழ் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘தனது வீட்டிலுள்ள உணவை’ என்றில்லாமல், ‘அவளுடைய கணவனின் உணவிலிருந்து’ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1699

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو عَامِرٍ الْأَشْعَرِيُّ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بُرَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏جَدِّهِ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏الْخَازِنَ ‏ ‏الْمُسْلِمَ الْأَمِينَ الَّذِي يُنْفِذُ وَرُبَّمَا قَالَ يُعْطِي مَا أُمِرَ بِهِ ‏ ‏فَيُعْطِيهِ كَامِلًا مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ

“தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத்திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகின்றார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1698

حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ وَعَلَى سَارِقٍ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ

“ஒருவர், ‘நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகின்றேன்’ எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், ’இன்றிரவு ஒரு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், ‚‘இறைவா! விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், ‘ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், ‘இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், ‘இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது’ என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், ‘இறைவா! விபசாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது’ எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு, ‘உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபசாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபசாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்’ எனக் கூறப்பட்டது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1697

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ الْحَضْرَمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا ‏ ‏جُنَّتَانِ ‏ ‏مِنْ حَدِيدٍ إِذَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَةٍ اتَّسَعَتْ عَلَيْهِ حَتَّى ‏ ‏تُعَفِّيَ ‏ ‏أَثَرَهُ ‏ ‏وَإِذَا هَمَّ الْبَخِيلُ بِصَدَقَةٍ تَقَلَّصَتْ عَلَيْهِ وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ وَانْقَبَضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا قَالَ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَيَجْهَدُ أَنْ يُوَسِّعَهَا فَلَا يَسْتَطِيعُ

“கஞ்சனுக்கும் வள்ளலுக்குமான உவமையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இருவரின் நிலைக்கு ஒத்திருக்கின்றது. வள்ளலானவர், ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரிவடைந்து, அவரது பாதச் சுவடுகளை(த் தொட்டு, பாவங்களை) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கின்றது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1696

حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ أَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ يَعْنِي الْعَقَدِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

‏ضَرَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَثَلَ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا ‏ ‏جُنَّتَانِ ‏ ‏مِنْ حَدِيدٍ قَدْ ‏ ‏اضْطُرَّتْ ‏ ‏أَيْدِيهِمَا إِلَى ثُدِيِّهِمَا وَتَرَاقِيهِمَا فَجَعَلَ الْمُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ حَتَّى تُغَشِّيَ ‏ ‏أَنَامِلَهُ ‏ ‏وَتَعْفُوَ ‏ ‏أَثَرَهُ ‏ ‏وَجَعَلَ الْبَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ ‏ ‏قَلَصَتْ ‏ ‏وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا قَالَ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ بِإِصْبَعِهِ فِي جَيْبِهِ فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلَا ‏ ‏تَوَسَّعُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கஞ்சனுக்கும் வள்ளலுக்கும் உதாரணம் கூறினார்கள்:

“அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இருவரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. வள்ளலானவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச் சுவடுகளை(த் தொட்டு பாவங்களை) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் அது விரியாது”.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள்” என்று அபூஹுரைரா ((ரலி) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 12, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1695

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏قَالَ وَقَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَثَلُ الْمُنْفِقِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلٍ عَلَيْهِ ‏ ‏جُبَّتَانِ ‏ ‏أَوْ ‏ ‏جُنَّتَانِ ‏ ‏مِنْ لَدُنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَإِذَا أَرَادَ الْمُنْفِقُ وَقَالَ الْآخَرُ فَإِذَا أَرَادَ الْمُتَصَدِّقُ أَنْ يَتَصَدَّقَ ‏ ‏سَبَغَتْ ‏ ‏عَلَيْهِ أَوْ مَرَّتْ وَإِذَا أَرَادَ الْبَخِيلُ أَنْ يُنْفِقَ ‏ ‏قَلَصَتْ ‏ ‏عَلَيْهِ وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا حَتَّى ‏ ‏تُجِنَّ ‏ ‏بَنَانَهُ ‏ ‏وَتَعْفُوَ ‏ ‏أَثَرَهُ ‏ ‏قَالَ فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ يُوَسِّعُهَا فَلَا تَتَّسِعُ

“வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உவமையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) இரு நீளங்கிகள் அல்லது இரு கவச ஆடைகள்’ அணிந்துள்ள இருவரின் நிலையைப் போன்றதாகும். வள்ளலானவர் தர்மம் செய்ய எண்ணும்போது அவரது கவசம் விரிவடைந்து அல்லது நீண்டு சென்று அவரது விரல் நுனிகளை மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு பாவங்களை) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1694

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ نَهَى فَذَكَرَ خِصَالًا وَقَالَ ‏ ‏مَنْ ‏ ‏مَنَحَ ‏ ‏مَنِيحَةً ‏ ‏غَدَتْ ‏ ‏بِصَدَقَةٍ وَرَاحَتْ بِصَدَقَةٍ صَبُوحِهَا وَغَبُوقِهَا

நபி (ஸல்) (சிலவற்றுக்குத்) தடை விதித்தார்கள்; சில நன்மைகளைத் தரப்படுத்திக் கூறினார்கள்:

“ஒருவர் ஒரு கால்நடையை (பால் கறந்து கொள்வதற்காக) இரவலாக வழங்கினால், அது காலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும், மாலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும் பெற்றுத் தருவதாக அமையும்; காலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் மாலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் (இந்த நன்மைகள் கிடைக்கும்)”.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)