حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ أَخْبَرَنِي ابْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ قَالَ لَمَّا احْتَرَقَ الْبَيْتُ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ حِينَ غَزَاهَا أَهْلُ الشَّامِ فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ تَرَكَهُ ابْنُ الزُّبَيْرِ حَتَّى قَدِمَ النَّاسُ الْمَوْسِمَ يُرِيدُ أَنْ يُجَرِّئَهُمْ أَوْ يُحَرِّبَهُمْ عَلَى أَهْلِ الشَّامِ فَلَمَّا صَدَرَ النَّاسُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ أَشِيرُوا عَلَيَّ فِي الْكَعْبَةِ أَنْقُضُهَا ثُمَّ أَبْنِي بِنَاءَهَا أَوْ أُصْلِحُ مَا وَهَى مِنْهَا قَالَ ابْنُ عَبَّاسٍ فَإِنِّي قَدْ فُرِقَ لِي رَأْيٌ فِيهَا أَرَى أَنْ تُصْلِحَ مَا وَهَى مِنْهَا وَتَدَعَ بَيْتًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهِ وَأَحْجَارًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهَا وَبُعِثَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ابْنُ الزُّبَيْرِ لَوْ كَانَ أَحَدُكُمْ احْتَرَقَ بَيْتُهُ مَا رَضِيَ حَتَّى يُجِدَّهُ فَكَيْفَ بَيْتُ رَبِّكُمْ إِنِّي مُسْتَخِيرٌ رَبِّي ثَلَاثًا ثُمَّ عَازِمٌ عَلَى أَمْرِي فَلَمَّا مَضَى الثَّلَاثُ أَجْمَعَ رَأْيَهُ عَلَى أَنْ يَنْقُضَهَا فَتَحَامَاهُ النَّاسُ أَنْ يَنْزِلَ بِأَوَّلِ النَّاسِ يَصْعَدُ فِيهِ أَمْرٌ مِنْ السَّمَاءِ حَتَّى صَعِدَهُ رَجُلٌ فَأَلْقَى مِنْهُ حِجَارَةً فَلَمَّا لَمْ يَرَهُ النَّاسُ أَصَابَهُ شَيْءٌ تَتَابَعُوا فَنَقَضُوهُ حَتَّى بَلَغُوا بِهِ الْأَرْضَ فَجَعَلَ ابْنُ الزُّبَيْرِ أَعْمِدَةً فَسَتَّرَ عَلَيْهَا السُّتُورَ حَتَّى ارْتَفَعَ بِنَاؤُهُ وَقَالَ ابْنُ الزُّبَيْرِ إِنِّي سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ:
إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنَّ النَّاسَ حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ وَلَيْسَ عِنْدِي مِنْ النَّفَقَةِ مَا يُقَوِّي عَلَى بِنَائِهِ لَكُنْتُ أَدْخَلْتُ فِيهِ مِنْ الْحِجْرِ خَمْسَ أَذْرُعٍ وَلَجَعَلْتُ لَهَا بَابًا يَدْخُلُ النَّاسُ مِنْهُ وَبَابًا يَخْرُجُونَ مِنْهُ
قَالَ فَأَنَا الْيَوْمَ أَجِدُ مَا أُنْفِقُ وَلَسْتُ أَخَافُ النَّاسَ قَالَ فَزَادَ فِيهِ خَمْسَ أَذْرُعٍ مِنْ الْحِجْرِ حَتَّى أَبْدَى أُسًّا نَظَرَ النَّاسُ إِلَيْهِ فَبَنَى عَلَيْهِ الْبِنَاءَ وَكَانَ طُولُ الْكَعْبَةِ ثَمَانِيَ عَشْرَةَ ذِرَاعًا فَلَمَّا زَادَ فِيهِ اسْتَقْصَرَهُ فَزَادَ فِي طُولِهِ عَشْرَ أَذْرُعٍ وَجَعَلَ لَهُ بَابَيْنِ أَحَدُهُمَا يُدْخَلُ مِنْهُ وَالْآخَرُ يُخْرَجُ مِنْهُ فَلَمَّا قُتِلَ ابْنُ الزُّبَيْرِ كَتَبَ الْحَجَّاجُ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُخْبِرُهُ بِذَلِكَ وَيُخْبِرُهُ أَنَّ ابْنَ الزُّبَيْرِ قَدْ وَضَعَ الْبِنَاءَ عَلَى أُسٍّ نَظَرَ إِلَيْهِ الْعُدُولُ مِنْ أَهْلِ مَكَّةَ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ الْمَلِكِ إِنَّا لَسْنَا مِنْ تَلْطِيخِ ابْنِ الزُّبَيْرِ فِي شَيْءٍ أَمَّا مَا زَادَ فِي طُولِهِ فَأَقِرَّهُ وَأَمَّا مَا زَادَ فِيهِ مِنْ الْحِجْرِ فَرُدَّهُ إِلَى بِنَائِهِ وَسُدَّ الْبَابَ الَّذِي فَتَحَهُ فَنَقَضَهُ وَأَعَادَهُ إِلَى بِنَائِهِ
யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும்வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டுவைத்தார்கள். ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காக அல்லது அவர்களை ரோஷம்கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டுவைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?” என்று கேட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி), “எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டுவிடுங்கள். நபி (ஸல்) இறைத்தூதராக நியமிக்கப்பட்டபோதும் மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்கள் இருக்கட்டும்” என்றார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு இறுதி முடிவுக்கு வருவேன்” என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர்மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒருவர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கட்டடப் பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின்மீது திரையும் தொங்கவிட்டார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கூறினார்கள்: “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘(உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையெனில், என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்றாலும் நான் ‘ஹிஜ்ரு’ப் பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்துவிட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) கூற நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை” என்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.
பின்னர் கஅபாவில் ‘ஹிஜ்ரு’ப் பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டிருக்க (ஹிஜ்ருப் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகரித்த பின்னரும் அது குறைவாகவே தெரிந்தது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கொல்லப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (ஹிஜ்ருப் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! ஹிஜ்ருப் பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!” என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் (ஹிஜ்ருப் பகுதிச் சுவரை) இடித்து, முன்பிருந்த பழைய அமைப்பிற்கு மாற்றி அமைத்தார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)