حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ سَيَّارٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا أَقْبَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ فَلَحِقَنِي رَاكِبٌ خَلْفِي فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ فَانْطَلَقَ بَعِيرِي كَأَجْوَدِ مَا أَنْتَ رَاءٍ مِنْ الْإِبِلِ فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا يُعْجِلُكَ يَا جَابِرُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ فَقَالَ أَبِكْرًا تَزَوَّجْتَهَا أَمْ ثَيِّبًا قَالَ قُلْتُ بَلْ ثَيِّبًا قَالَ هَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ قَالَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ قَالَ وَقَالَ إِذَا قَدِمْتَ فَالْكَيْسَ الْكَيْسَ
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது நான் இருந்துகொண்டு (அதை) விரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம், ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), “ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.
பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலை வாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும், “நீ (வீட்டுக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்” என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)