அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2667

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏كُنَّا فِي مَسِيرٍ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا عَلَى ‏ ‏نَاضِحٍ ‏ ‏إِنَّمَا هُوَ فِي أُخْرَيَاتِ النَّاسِ قَالَ فَضَرَبَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ قَالَ نَخَسَهُ أُرَاهُ قَالَ ‏ ‏بِشَيْءٍ كَانَ مَعَهُ قَالَ فَجَعَلَ بَعْدَ ذَلِكَ يَتَقَدَّمُ النَّاسَ يُنَازِعُنِي حَتَّى إِنِّي لِأَكُفُّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ وَقَالَ لِي أَتَزَوَّجْتَ بَعْدَ أَبِيكَ قُلْتُ نَعَمْ قَالَ ‏ ‏ثَيِّبًا ‏ ‏أَمْ بِكْرًا قَالَ قُلْتُ ثَيِّبًا قَالَ ‏ ‏فَهَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُضَاحِكُكَ وَتُضَاحِكُهَا وَتُلَاعِبُكَ وَتُلَاعِبُهَا ‏


قَالَ ‏ ‏أَبُو نَضْرَةَ ‏ ‏فَكَانَتْ كَلِمَةً يَقُولُهَا الْمُسْلِمُونَ افْعَلْ كَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ

நாங்கள் ஒரு (போரை முடித்துத் திரும்பும்) பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நான் நீர் இறைக்கும் எனது ஒட்டகத்தின் மீதிருந்தேன். அது மக்களின் பின்வரிசையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மிடமிருந்த ஒரு பொருளால் அதை அடித்தார்கள் அல்லது குத்தினார்கள். பின்னர் அது எனக்கு அடங்காமல் மக்களை முந்திக்கொண்டு விரைந்து ஓடத் துவங்கியது. பின்னர் அதை நான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இ(ந்த ஒட்டகத்)தை இன்ன விலைக்கு எனக்கு நீ விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். அவர்கள், “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இன்ன விலைக்கு இதை நீ எனக்கு விற்றுவிடுகிறாயா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். அவர்கள் என்னிடம், “உன் தந்தை(யின் மறைவு)க்குப் பின் நீ மணமுடித்தாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணையா, கன்னிப் பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந் தேன்)” என்றேன். “ஏன், கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவள் உனக்கும் நீ அவளுக்கும் மகிழ்வூட்டலாமே; அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

பின்னர் (“அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இதை நீ இன்ன விலைக்கு எனக்கு விற்றுவிடுகிறாயா?” எனும்) இச்சொல்லே, “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இன்னின்னதைச் செய்” என்று முஸ்லிம்கள் கூறுகின்ற சொல் வழக்காக அமைந்தது என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2666

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏وَهْبِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي غَزَاةٍ فَأَبْطَأَ بِي جَمَلِي فَأَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي يَا ‏ ‏جَابِرُ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ مَا شَأْنُكَ قُلْتُ أَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا فَتَخَلَّفْتُ فَنَزَلَ فَحَجَنَهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ ارْكَبْ فَرَكِبْتُ فَلَقَدْ رَأَيْتُنِي أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَتَزَوَّجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ أَبِكْرًا أَمْ ثَيِّبًا فَقُلْتُ بَلْ ثَيِّبٌ قَالَ ‏ ‏فَهَلَّا ‏ ‏جَارِيَةً ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ قُلْتُ إِنَّ لِي أَخَوَاتٍ فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ وَتَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ قَالَ أَمَا إِنَّكَ قَادِمٌ فَإِذَا قَدِمْتَ ‏ ‏فَالْكَيْسَ الْكَيْسَ ‏ ‏ثُمَّ قَالَ أَتَبِيعُ جَمَلَكَ قُلْتُ نَعَمْ فَاشْتَرَاهُ مِنِّي ‏ ‏بِأُوقِيَّةٍ ‏ ‏ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدِمْتُ ‏ ‏بِالْغَدَاةِ ‏ ‏فَجِئْتُ الْمَسْجِدَ فَوَجَدْتُهُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَقَالَ الْآنَ حِينَ قَدِمْتَ قُلْتُ نَعَمْ قَالَ فَدَعْ جَمَلَكَ وَادْخُلْ فَصَلِّ رَكْعَتَيْنِ قَالَ فَدَخَلْتُ فَصَلَّيْتُ ثُمَّ رَجَعْتُ فَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏أَنْ يَزِنَ لِي ‏ ‏أُوقِيَّةً ‏ ‏فَوَزَنَ لِي ‏ ‏بِلَالٌ ‏ ‏فَأَرْجَحَ فِي الْمِيزَانِ قَالَ فَانْطَلَقْتُ فَلَمَّا وَلَّيْتُ قَالَ ادْعُ لِي ‏ ‏جَابِرًا ‏ ‏فَدُعِيتُ فَقُلْتُ الْآنَ يَرُدُّ عَلَيَّ الْجَمَلَ وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فَقَالَ خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைத் தாமதப் படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்து, “ஜாபிர்(தானே)?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். “எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்துபோனதால் நான் பின்தங்கிவிட்டேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் ஒட்டகத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு “ஒட்டகத்தில் ஏறு” என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ திருமணம் செய்து கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு, “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலை வாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று கூறிவிட்டு, “உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் “சரி” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் “ஊக்கியா” விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்)

(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருப்பதைக் கண்டேன். “இப்போதுதான் வருகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு, உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுதுவிட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்காக ஓர் ‘ஊக்கியா’ எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது “ஜாபிரை என்னிடம் அழைத்துவா” என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனத்திற்குள்) “இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப் படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை” என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2665

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏سَيَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي غَزَاةٍ فَلَمَّا أَقْبَلْنَا تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي ‏ ‏قَطُوفٍ ‏ ‏فَلَحِقَنِي رَاكِبٌ خَلْفِي ‏ ‏فَنَخَسَ ‏ ‏بَعِيرِي ‏ ‏بِعَنَزَةٍ ‏ ‏كَانَتْ مَعَهُ فَانْطَلَقَ بَعِيرِي كَأَجْوَدِ مَا أَنْتَ رَاءٍ مِنْ الْإِبِلِ فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا يُعْجِلُكَ يَا ‏ ‏جَابِرُ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ فَقَالَ أَبِكْرًا تَزَوَّجْتَهَا أَمْ ثَيِّبًا قَالَ قُلْتُ بَلْ ثَيِّبًا قَالَ ‏ ‏هَلَّا ‏ ‏جَارِيَةً ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ قَالَ فَلَمَّا قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ ‏ ‏الشَّعِثَةُ ‏ ‏وَتَسْتَحِدَّ ‏ ‏الْمُغِيبَةُ ‏ ‏قَالَ وَقَالَ إِذَا قَدِمْتَ ‏ ‏فَالْكَيْسَ الْكَيْسَ

நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது நான் இருந்துகொண்டு (அதை) விரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம், ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), “ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலை வாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும், “நீ (வீட்டுக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2664

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏هَلَكَ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ ‏ ‏أَوْ قَالَ سَبْعَ ‏ ‏فَتَزَوَّجْتُ امْرَأَةً ‏ ‏ثَيِّبًا ‏ ‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏جَابِرُ ‏ ‏تَزَوَّجْتَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَبِكْرٌ أَمْ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏قَالَ قُلْتُ بَلْ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏فَهَلَّا ‏ ‏جَارِيَةً ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ ‏ ‏أَوْ قَالَ تُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ ‏ ‏قَالَ قُلْتُ لَهُ إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏هَلَكَ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ ‏ ‏أَوْ سَبْعَ ‏ ‏وَإِنِّي كَرِهْتُ أَنْ آتِيَهُنَّ ‏ ‏أَوْ أَجِيئَهُنَّ ‏ ‏بِمِثْلِهِنَّ فَأَحْبَبْتُ أَنْ أَجِيءَ بِامْرَأَةٍ تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ قَالَ فَبَارَكَ اللَّهُ لَكَ ‏ ‏أَوْ قَالَ لِي خَيْرًا ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي الرَّبِيعِ ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ نَكَحْتَ يَا ‏ ‏جَابِرُ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ إِلَى قَوْلِهِ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتَمْشُطُهُنَّ قَالَ أَصَبْتَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்தபோது ஒன்பது (அல்லது ஏழு) பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு, “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால், நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே! அல்லது நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) ஒன்பது அல்லது ஏழு பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணந்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (மனைவியாக அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உனக்கு வளத்தை (அல்லது) சிறப்பை அளிப்பானாக” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அபுர்ரபீஉ அஸ்ஸஹ்ரானீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ … நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘திருமணம் முடித்துக்கொண்டாயா, ஜாபிரே?’ என்று கேட்டார்கள் …” என ஜாபிர் (ரலி) கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து, “ … மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை(க் கருத்தாக)ப் பராமரித்துக்கொள்ளும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே கன்னி கழிந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று நான் கூறியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நீ செய்தது சரிதான்’ என்று கூறினார்கள்” என்பதோடு ஹதீஸ் முடிந்துவிடுகிறது.

அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2663

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏تَزَوَّجْتُ امْرَأَةً فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تَزَوَّجْتَ قُلْتُ نَعَمْ قَالَ أَبِكْرًا أَمْ ‏ ‏ثَيِّبًا ‏ ‏قُلْتُ ‏ ‏ثَيِّبًا ‏ ‏قَالَ فَأَيْنَ أَنْتَ مِنْ الْعَذَارَى وَلِعَابِهَا ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏فَقَالَ ‏ ‏قَدْ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَإِنَّمَا قَالَ ‏ ‏فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ

நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ மணமுடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்), “கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “கன்னி கழிந்த பெண்ணை மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்), “கன்னிப் பெண்ககளுடன் (கொஞ்சிக் குலவி) விளையாடுகின்ற வாய்ப்பை விட்டும் நீ விலகிச் சென்றுவிட்டாயே?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை (அறிவிப்பாளர்) அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் ஷுஅபா (ரஹ்) கூறியபோது, “நபி (ஸல்), ‘கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!’ என என்னிடம் கேட்டார்கள் என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள்” என்று அம்ரு பின் தீனார் (ரஹ்) கூறினார்.