அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2666

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏وَهْبِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي غَزَاةٍ فَأَبْطَأَ بِي جَمَلِي فَأَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي يَا ‏ ‏جَابِرُ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ مَا شَأْنُكَ قُلْتُ أَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا فَتَخَلَّفْتُ فَنَزَلَ فَحَجَنَهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ ارْكَبْ فَرَكِبْتُ فَلَقَدْ رَأَيْتُنِي أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَتَزَوَّجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ أَبِكْرًا أَمْ ثَيِّبًا فَقُلْتُ بَلْ ثَيِّبٌ قَالَ ‏ ‏فَهَلَّا ‏ ‏جَارِيَةً ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ قُلْتُ إِنَّ لِي أَخَوَاتٍ فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ وَتَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ قَالَ أَمَا إِنَّكَ قَادِمٌ فَإِذَا قَدِمْتَ ‏ ‏فَالْكَيْسَ الْكَيْسَ ‏ ‏ثُمَّ قَالَ أَتَبِيعُ جَمَلَكَ قُلْتُ نَعَمْ فَاشْتَرَاهُ مِنِّي ‏ ‏بِأُوقِيَّةٍ ‏ ‏ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدِمْتُ ‏ ‏بِالْغَدَاةِ ‏ ‏فَجِئْتُ الْمَسْجِدَ فَوَجَدْتُهُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَقَالَ الْآنَ حِينَ قَدِمْتَ قُلْتُ نَعَمْ قَالَ فَدَعْ جَمَلَكَ وَادْخُلْ فَصَلِّ رَكْعَتَيْنِ قَالَ فَدَخَلْتُ فَصَلَّيْتُ ثُمَّ رَجَعْتُ فَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏أَنْ يَزِنَ لِي ‏ ‏أُوقِيَّةً ‏ ‏فَوَزَنَ لِي ‏ ‏بِلَالٌ ‏ ‏فَأَرْجَحَ فِي الْمِيزَانِ قَالَ فَانْطَلَقْتُ فَلَمَّا وَلَّيْتُ قَالَ ادْعُ لِي ‏ ‏جَابِرًا ‏ ‏فَدُعِيتُ فَقُلْتُ الْآنَ يَرُدُّ عَلَيَّ الْجَمَلَ وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فَقَالَ خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைத் தாமதப் படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்து, “ஜாபிர்(தானே)?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். “எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்துபோனதால் நான் பின்தங்கிவிட்டேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் ஒட்டகத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு “ஒட்டகத்தில் ஏறு” என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ திருமணம் செய்து கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு, “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், “எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலை வாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று கூறிவிட்டு, “உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் “சரி” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் “ஊக்கியா” விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்)

(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருப்பதைக் கண்டேன். “இப்போதுதான் வருகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு, உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுதுவிட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்காக ஓர் ‘ஊக்கியா’ எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது “ஜாபிரை என்னிடம் அழைத்துவா” என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனத்திற்குள்) “இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப் படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை” என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: