அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2709

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏مَوْلَى ‏ ‏الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ: ‏

‏أَنَّ ‏ ‏أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ ‏ ‏طَلَّقَهَا الْبَتَّةَ وَهُوَ غَائِبٌ ‏ ‏فَأَرْسَلَ ‏ ‏إِلَيْهَا وَكِيلُهُ بِشَعِيرٍ فَسَخِطَتْهُ فَقَالَ وَاللَّهِ مَا لَكِ عَلَيْنَا مِنْ شَيْءٍ فَجَاءَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏لَيْسَ لَكِ عَلَيْهِ نَفَقَةٌ فَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ فِي بَيْتِ ‏ ‏أُمِّ شَرِيكٍ ‏ ‏ثُمَّ قَالَ تِلْكِ امْرَأَةٌ ‏ ‏يَغْشَاهَا ‏ ‏أَصْحَابِي اعْتَدِّي عِنْدَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى تَضَعِينَ ثِيَابَكِ فَإِذَا ‏ ‏حَلَلْتِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏قَالَتْ فَلَمَّا ‏ ‏حَلَلْتُ ‏ ‏ذَكَرْتُ لَهُ أَنَّ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏وَأَبَا جَهْمٍ ‏ ‏خَطَبَانِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا ‏ ‏أَبُو جَهْمٍ ‏ ‏فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ وَأَمَّا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَصُعْلُوكٌ ‏ ‏لَا مَالَ لَهُ انْكِحِي ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏فَكَرِهْتُهُ ثُمَّ قَالَ انْكِحِي ‏ ‏أُسَامَةَ ‏ ‏فَنَكَحْتُهُ فَجَعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا ‏ ‏وَاغْتَبَطْتُ

அபூஅம்ரு பின் ஹஃப்ஸு (ரலி) என்னை (மூன்றாவது) இறுதியான தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது உதவியாகத் தரப்பட்டதுதான்)” என்று கூறினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை ‘இத்தா’ இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), “அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் மகன்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ‘இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர் ஆவார். (அவர் வீட்டில் இருந்தாலும்) நீ துணி மாற்றிக்கொள்ளலாம். நீ ‘இத்தா’வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!” என்று கூறினார்கள்.

அவ்வாறே நான் ‘இத்தா’வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்மு பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூஜஹ்மு தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, எந்தச் செல்வமும் இல்லாத ஏழை . நீ உஸாமா பின் ஸைதை மணந்துகொள்” என்று கூறினார்கள். நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீ உஸாமாவை மணந்துகொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் மன நிறைவடைந்தேன்!

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)

Share this Hadith: