அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 788

حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَكِّيٌّ ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏أَخْبَرَنَا قَالَ :‏

كَانَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ الْأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا مُسْلِمٍ ‏ ‏أَرَاكَ ‏ ‏تَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ هَذِهِ الْأُسْطُوَانَةِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَهَا ‏

ஸலமா பின் அக்வஃ (ரலி) (மஸ்ஜிதுந்நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், “அபூ முஸ்லிம்! நீங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கின்றேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு ஸலமா (ரலி), “நபி (ஸல்) இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன் (ஆகவேதான் நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) வழியாக யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 787

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ وَهُوَ ابْنُ الْأَكْوَعِ :‏

أَنَّهُ كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏مَوْضِعَ مَكَانِ الْمُصْحَفِ يُسَبِّحُ فِيهِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏ذَلِكَ الْمَكَانَ ‏ ‏وَكَانَ بَيْنَ الْمِنْبَرِ وَالْقِبْلَةِ قَدْرُ مَمَرِّ الشَّاةِ

ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி), (மஸ்ஜிதுந் நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்தை அடுத்துள்ள (தூண் எதிரே) உள்ள இடத்தில் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழும் வழக்கமுள்ளவராக இருந்தார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (நஃபில்) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கே இடைவெளி இருந்தது” என்று நினைவு கூர்ந்தார்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுக் அக்வஃ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 786

حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي حَازِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏ ‏قَالَ :‏

‏كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழ நிற்கும் இடத்திற்கும் (கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 785

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ ‏ ‏يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَارِّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي ‏ ‏قَالَ ‏ ‏أَبُو جُهَيْمٍ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً ‏


حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ الْأَنْصَارِيِّ ‏ ‏مَا سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

“தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்குக் குறுக்கே கடந்து செல்வதைவிட நாற்பது (நாள்கள்/ மாதங்கள்/ஆண்டுகள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நன்மை பயப்பதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்புகள் :

“ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) அபூஜுஹைம் (ரலி) என்ன செவியுற்றிருக்கிறார்கள் என்று கேட்டு வருமாறு என்னை அனுப்பினார்கள். (நான் சென்று கேட்டபோது) அபூஜுஹைம் (ரலி) அவர்கள் மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள்” என்று புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

“புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிட்ட நாற்பது என்பது நாட்களா?, மாதங்களா?, ஆண்டுகளா? என்பது எனக்குத் தெரியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுந்நள்ரு ஸாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) கூறுகின்றார்.

வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் அபூஜுஹைம் அல்அன்ஸாரீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) என்ன செவியுற்றிருக்கின்றார் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அனுப்பினார்கள் என புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 784

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ ابْنِ أَبِي فُدَيْكٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏صَدَقَةَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ ‏


و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَدَقَةُ بْنُ يَسَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُا ‏ ‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ

“உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்குக் குறுக்கே கடந்துசெல்ல அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும்போது சண்டையிட(முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவருடன் கூட்டாளி(யாக ஷைத்தான்) இருக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை நான் இப்னு உமர் (ரலி) இடமிருந்து செவியுற்றேன்” என்று ஸதக்கதிப்னு யஸார் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 783

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ هِلَالٍ يَعْنِي حُمَيْدًا ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا أَنَا وَصَاحِبٌ لِي نَتَذَاكَرُ حَدِيثًا إِذْ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو صَالِحٍ السَّمَّانُ : ‏

أَنَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏وَرَأَيْتُ مِنْهُ قَالَ بَيْنَمَا أَنَا مَعَ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏يُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ إِذْ جَاءَ رَجُلٌ شَابٌّ مِنْ بَنِي ‏ ‏أَبِي مُعَيْطٍ ‏ ‏أَرَادَ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ فِي نَحْرِهِ فَنَظَرَ فَلَمْ يَجِدْ ‏ ‏مَسَاغًا ‏ ‏إِلَّا بَيْنَ يَدَيْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏فَعَادَ فَدَفَعَ فِي نَحْرِهِ أَشَدَّ مِنْ الدَّفْعَةِ الْأُولَى ‏ ‏فَمَثَلَ ‏ ‏قَائِمًا فَنَالَ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏ثُمَّ زَاحَمَ النَّاسَ فَخَرَجَ فَدَخَلَ عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ قَالَ وَدَخَلَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَرْوَانُ ‏ ‏مَا لَكَ وَلِابْنِ أَخِيكَ جَاءَ ‏ ‏يَشْكُوكَ فَقَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْ فِي نَحْرِهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ

நான் ஒரு வெளிக்கிழமையில் அபூஸயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்றுவிடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து, அதன் எதிரே தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்து செல்ல முற்பட்டார். உடனே அபூஸயீத் (ரலி) தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் (சுற்றிலும்) பார்த்தார். அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்ல முயன்றார். அபூஸயீத் (ரலி) முதல் தடவையைவிடக் கடுமையாகத் தள்ளினார்கள். அந்த இளைஞர் (விலகாமல்) நின்றுகொண்டு அபூஸயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.

பிறகு மக்களை விலக்கிக் கொண்டு (ஆளுநர்) மர்வான் பின் ஹகம் (ரலி) இடம் சென்று நடந்ததை முறையிட்டார். அபூஸயீத் (ரலி) அவர்களும் மர்வான் (ரலி) இடம் சென்றார்கள். அப்போது, “உங்களுக்கும் உங்கள் சகோதரர் மகனுக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகின்றாரே!” என்று அபூஸயீத் (ரலி) அவர்களிடம் மர்வான் (ரலி) கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி), “மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் சண்டையிட (முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில் அவன் ஷைத்தான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி) வழியாக ஸாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்)


குறிப்பு :

நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) ஸாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்), “நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைக் கண்டதையும் அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு ஹதீஸையும் உமக்குக் கூறுகின்றேன்” எனக் கூறிவிட்டு, மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள் என்று ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 782

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ ‏ ‏وَلْيَدْرَأْهُ ‏ ‏مَا اسْتَطَاعَ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ‏

“உங்களில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர், எவரையும் தமக்குக் குறுக்கே கடந்து செல்லவிடவேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுத்தால் அவருடன் சண்டையிட(முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்; ஏனெனில் அவன் ஷைத்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 781

حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ :‏

أَنَّهُ أَقْبَلَ يَسِيرُ عَلَى حِمَارٍ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَائِمٌ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِمِنًى ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ قَالَ فَسَارَ الْحِمَارُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ ثُمَّ نَزَلَ عَنْهُ فَصَفَّ مَعَ النَّاسِ


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِيهِ ‏ ‏مِنًى ‏ ‏وَلَا ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَقَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ أَوْ يَوْمَ الْفَتْحِ ‏

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது கழுதையொன்றில் பயணித்தவாறு நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (எனது) கழுதை தொழுது கொண்டிருந்தவர்களின் வரிசையினூடே நடந்துசென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

இப்னு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “… நபி (ஸல்) அரஃபாவில் (மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்” என்று இடப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், மினா, அரஃபா போன்ற இடப்பெயர் குறிப்பு ஏதும் இடம் பெறவில்லை. “விடைபெறும் ஹஜ்ஜின் போது”, “மக்கா வெற்றி நாளில்” என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 780

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

أَقْبَلْتُ رَاكِبًا عَلَى ‏ ‏أَتَانٍ ‏ ‏وَأَنَا يَوْمَئِذٍ قَدْ ‏ ‏نَاهَزْتُ ‏ ‏الِاحْتِلَامَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ ‏ ‏بِمِنًى ‏ ‏فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ الصَّفِّ فَنَزَلْتُ فَأَرْسَلْتُ ‏ ‏الْأَتَانَ ‏ ‏تَرْتَعُ ‏ ‏وَدَخَلْتُ فِي الصَّفِّ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விடைபெறும் ஹஜ்ஜின் போது) மினாவில் (தடுப்பு எதையும் முன்னோக்காமல்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன். அந்த நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன். (தொழுது கொண்டிருந்தவர்களின்) அணிக்கு முன்னால் நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டுத் தொழுகை அணியினூடே நுழைந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக என்னை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 779

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا جُحَيْفَةَ ‏ ‏قَالَ :‏

خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْهَاجِرَةِ ‏ ‏إِلَى ‏ ‏الْبَطْحَاءِ ‏ ‏فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ ‏ ‏عَنَزَةٌ ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَزَادَ فِيهِ ‏ ‏عَوْنٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَبِي جُحَيْفَةَ ‏ ‏وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏الْحَكَمِ ‏ ‏فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் ’பத்ஹா வெளி’யை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் உளூச் செய்துவிட்டு லுஹ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து அஸ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா வஹ்பு பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி)


குறிப்பு :

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்களும் கடந்து சென்று கொண்டிருந்தனர். கழுதைகள் (போன்ற கால்நடைகளும்) கடந்து சென்று கொண்டிருந்தன” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டி போட்டனர்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.