அத்தியாயம்: 12, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1658

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ وَقَالَ يَمِينُ اللَّهِ مَلْأَى وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏مَلْآنُ ‏ ‏سَحَّاءُ ‏ ‏لَا ‏ ‏يَغِيضُهَا ‏ ‏شَيْءٌ اللَّيْلَ وَالنَّهَارَ

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், “ஆதமின் மகனே! நீ (பிறருக்கு) வழங்கு; நீ வழங்கப்படுவாய்” என்று சொன்னான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

மேலும், “அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகின்றது. எதுவும் அதைக் குறைத்துவிடாது” என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1657

و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَشْهَبِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خُلَيْدٌ الْعَصَرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏الْأَحْنَفِ بْنِ قَيْسٍ ‏ ‏قَالَ : ‏

‏كُنْتُ فِي ‏ ‏نَفَرٍ ‏ ‏مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏فَمَرَّ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏وَهُوَ يَقُولُ ‏ ‏بَشِّرْ ‏ ‏الْكَانِزِينَ ‏ ‏بِكَيٍّ فِي ظُهُورِهِمْ يَخْرُجُ مِنْ جُنُوبِهِمْ وَبِكَيٍّ مِنْ قِبَلِ أَقْفَائِهِمْ يَخْرُجُ مِنْ جِبَاهِهِمْ قَالَ ثُمَّ تَنَحَّى فَقَعَدَ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏قَالَ فَقُمْتُ إِلَيْهِ فَقُلْتُ مَا شَيْءٌ سَمِعْتُكَ تَقُولُ قُبَيْلُ قَالَ مَا قُلْتُ إِلَّا شَيْئًا قَدْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّهِمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قُلْتُ مَا تَقُولُ فِي هَذَا الْعَطَاءِ قَالَ خُذْهُ فَإِنَّ فِيهِ الْيَوْمَ مَعُونَةً فَإِذَا كَانَ ثَمَنًا لِدِينِكَ فَدَعْهُ

நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி), “(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு(ப் பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி(!) கூறுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “இவர்தாம் அபூதர் (ரலி)” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவரிடம் சென்று, “சற்று முன்பாக நீங்கள் ஏதோ கூறிக்கொண்டிருந்தீர்களே அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்களுடைய நபி (முஹம்மது-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைத் தவிர வேறெதையும் நான் கூறவில்லை” என்றார்கள். நான், “(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும் இந்த) நன்கொடை தொடர்பாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி), “அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக, அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 12, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1656

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَحْنَفِ بْنِ قَيْسٍ ‏ ‏قَالَ : ‏

‏قَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَبَيْنَا أَنَا فِي حَلْقَةٍ فِيهَا مَلَأٌ مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏إِذْ جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏أَخْشَنُ الثِّيَابِ أَخْشَنُ الْجَسَدِ أَخْشَنُ الْوَجْهِ فَقَامَ عَلَيْهِمْ فَقَالَ بَشِّرْ ‏ ‏الْكَانِزِينَ ‏ ‏بِرَضْفٍ ‏ ‏يُحْمَى ‏ ‏عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ فَيُوضَعُ عَلَى حَلَمَةِ ثَدْيِ أَحَدِهِمْ حَتَّى يَخْرُجَ مِنْ ‏‏نُغْضِ ‏كَتِفَيْهِ وَيُوضَعُ عَلَى ‏ ‏نُغْضِ ‏ ‏كَتِفَيْهِ حَتَّى يَخْرُجَ مِنْ حَلَمَةِ ثَدْيَيْهِ يَتَزَلْزَلُ قَالَ فَوَضَعَ الْقَوْمُ رُءُوسَهُمْ فَمَا رَأَيْتُ أَحَدًا مِنْهُمْ رَجَعَ إِلَيْهِ شَيْئًا قَالَ فَأَدْبَرَ وَاتَّبَعْتُهُ حَتَّى جَلَسَ إِلَى سَارِيَةٍ فَقُلْتُ مَا رَأَيْتُ هَؤُلَاءِ إِلَّا كَرِهُوا مَا قُلْتَ لَهُمْ قَالَ إِنَّ هَؤُلَاءِ لَا يَعْقِلُونَ شَيْئًا إِنَّ خَلِيلِي ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعَانِي فَأَجَبْتُهُ فَقَالَ أَتَرَى ‏ ‏أُحُدًا ‏ ‏فَنَظَرْتُ مَا عَلَيَّ مِنْ الشَّمْسِ وَأَنَا أَظُنُّ أَنَّهُ يَبْعَثُنِي فِي حَاجَةٍ لَهُ فَقُلْتُ أَرَاهُ فَقَالَ ‏ ‏مَا يَسُرُّنِي أَنَّ لِي مِثْلَهُ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ إِلَّا ثَلَاثَةَ دَنَانِيرَ ثُمَّ هَؤُلَاءِ يَجْمَعُونَ الدُّنْيَا لَا يَعْقِلُونَ شَيْئًا قَالَ قُلْتُ مَا لَكَ وَلِإِخْوَتِكَ مِنْ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏لَا ‏ ‏تَعْتَرِيهِمْ ‏ ‏وَتُصِيبُ مِنْهُمْ قَالَ لَا وَرَبِّكَ لَا أَسْأَلُهُمْ عَنْ دُنْيَا وَلَا أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ حَتَّى أَلْحَقَ بِاللَّهِ وَرَسُولِهِ

நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒருவர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, “(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்துவைத்திருப்போருக்கு நற்செய்தி(!) கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்” என்று கூறினார்.

மக்கள் (இதைக் கேட்டவுடன்) தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.

பிறகு அவர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், “நீங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்” என்றேன். அதற்கு அவர், “இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காஸிம் (முஹம்மது-ஸல்) (ஒரு முறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் “உஹுத் மலையை நீர் பார்க்கின்றீரா?” என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, “(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கின்றேன்” என்றேன். அப்போது “இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

நான், “உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று? நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உம்முடைய இறைவன் மீதாணையாக! நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக, அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 12, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1655

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ وَهُوَ ابْنُ رُفَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ : ‏

‏خَرَجْتُ لَيْلَةً مِنْ اللَّيَالِي فَإِذَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمْشِي وَحْدَهُ لَيْسَ مَعَهُ إِنْسَانٌ قَالَ فَظَنَنْتُ أَنَّهُ يَكْرَهُ أَنْ يَمْشِيَ مَعَهُ أَحَدٌ قَالَ فَجَعَلْتُ أَمْشِي فِي ظِلِّ الْقَمَرِ فَالْتَفَتَ فَرَآنِي فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏تَعَالَهْ قَالَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً فَقَالَ إِنَّ الْمُكْثِرِينَ هُمْ الْمُقِلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا مَنْ أَعْطَاهُ اللَّهُ خَيْرًا ‏ ‏فَنَفَحَ ‏ ‏فِيهِ يَمِينَهُ وَشِمَالَهُ وَبَيْنَ يَدَيْهِ وَوَرَاءَهُ وَعَمِلَ فِيهِ خَيْرًا قَالَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً فَقَالَ اجْلِسْ هَا هُنَا قَالَ فَأَجْلَسَنِي فِي ‏ ‏قَاعٍ ‏ ‏حَوْلَهُ حِجَارَةٌ فَقَالَ لِي اجْلِسْ هَا هُنَا حَتَّى أَرْجِعَ إِلَيْكَ قَالَ فَانْطَلَقَ فِي ‏ ‏الْحَرَّةِ ‏ ‏حَتَّى لَا أَرَاهُ فَلَبِثَ عَنِّي فَأَطَالَ اللَّبْثَ ثُمَّ إِنِّي سَمِعْتُهُ وَهُوَ مُقْبِلٌ وَهُوَ يَقُولُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ فَلَمَّا جَاءَ لَمْ أَصْبِرْ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ مَنْ تُكَلِّمُ فِي جَانِبِ ‏ ‏الْحَرَّةِ ‏ ‏مَا سَمِعْتُ أَحَدًا يَرْجِعُ إِلَيْكَ شَيْئًا قَالَ ذَاكَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَرَضَ لِي فِي جَانِبِ ‏ ‏الْحَرَّةِ ‏ ‏فَقَالَ ‏ ‏بَشِّرْ أُمَّتَكَ أَنَّهُ مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ قَالَ قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ قَالَ قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ وَإِنْ شَرِبَ الْخَمْرَ

நான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்கவில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம் படாத நிழலில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, “யார் இது?” என்று கேட்டார்கள். “அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். நான் அபூதர்” என்று பதிலளித்தேன். அவர்கள் “அபூதர்ரே, இங்கே வாருங்கள்” என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது, “(இம்மையில்) அதிக(ச் செல்வ)ம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது, “இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்” என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்ட வெளியில் என்னை உட்காரவைத்து, “நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்” என்று கூறிவிட்டு (பாறைகள் நிறைந்த அந்த) ‘ஹர்ரா’ப் பகுதியில் நடந்து சென்றார்கள். அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது, “அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே!” என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘ஹர்ரா’ப் பகுதியில் நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் உங்களுக்கு எந்தப் பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து, ‘யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறிவிடுங்கள்’ என்றார். உடனே நான், “ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். நான், “அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான், “அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் மது அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1654

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ : ‏

‏كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏حَرَّةِ الْمَدِينَةِ ‏ ‏عِشَاءً وَنَحْنُ نَنْظُرُ إِلَى ‏ ‏أُحُدٍ ‏ ‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أُحِبُّ أَنَّ ‏ ‏أُحُدًا ‏ ‏ذَاكَ عِنْدِي ذَهَبٌ أَمْسَى ثَالِثَةً عِنْدِي مِنْهُ دِينَارٌ إِلَّا دِينَارًا ‏ ‏أَرْصُدُهُ ‏ ‏لِدَيْنٍ إِلَّا أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا ‏ ‏حَثَا ‏ ‏بَيْنَ يَدَيْهِ وَهَكَذَا عَنْ يَمِينِهِ وَهَكَذَا عَنْ شِمَالِهِ قَالَ ثُمَّ مَشَيْنَا فَقَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الْأَكْثَرِينَ هُمْ الْأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا مِثْلَ مَا صَنَعَ فِي الْمَرَّةِ الْأُولَى قَالَ ثُمَّ مَشَيْنَا قَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏كَمَا أَنْتَ حَتَّى آتِيَكَ قَالَ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏عَنِّي قَالَ سَمِعْتُ ‏ ‏لَغَطًا ‏ ‏وَسَمِعْتُ صَوْتًا قَالَ فَقُلْتُ لَعَلَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عُرِضَ ‏ ‏لَهُ قَالَ فَهَمَمْتُ أَنْ أَتَّبِعَهُ قَالَ ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ لَا ‏ ‏تَبْرَحْ ‏ ‏حَتَّى آتِيَكَ قَالَ فَانْتَظَرْتُهُ فَلَمَّا جَاءَ ذَكَرْتُ لَهُ الَّذِي سَمِعْتُ قَالَ فَقَالَ ذَاكَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏أَتَانِي فَقَالَ ‏ ‏مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ قَالَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ

நான் ஓர் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ‘ஹர்ரா’ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூதர்ரே!” என்று என்னை அழைத்தார்கள். நான் “பணிந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்), “இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி, இப்படி, இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.

பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்), “அபூதர்ரே!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், “பணிந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி ஸல்), “அதிகமான(செல்வம் இவ்வுலகில் உள்ள)வர்கள் மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்” என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, “இப்படி, இப்படி, இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர” என்று கூறினார்கள்.

பிறகு, (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) என்னிடம், “அபூதர்! நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!” என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னைவிட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோவோர் இடர் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, அவர்களைப் பின்தொடரத் துணிந்தேன். ஆனால், என்னிடம் நபி (ஸல்), “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் பேச்செடுத்தேன்.

அப்போது நபி (ஸல்), “அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து, ‘உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்’ என்றார். நான் (ஜிப்ரீலிடம்), அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர், ‘(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே’ என்று பதிலளித்தார்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1653

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ الْجُمَحِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الرَّبِيعُ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا يَسُرُّنِي أَنَّ لِي ‏ ‏أُحُدًا ‏ ‏ذَهَبًا تَأْتِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ إِلَّا دِينَارٌ ‏ ‏أَرْصُدُهُ ‏ ‏لِدَيْنٍ عَلَيَّ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, கடனை அடைப்பதற்காக நான் (தனியாக) எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1652

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ : ‏

انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ جَالِسٌ فِي ظِلِّ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَلَمَّا رَآنِي قَالَ هُمْ الْأَخْسَرُونَ وَرَبِّ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏قَالَ فَجِئْتُ حَتَّى جَلَسْتُ فَلَمْ ‏ ‏أَتَقَارَّ ‏ ‏أَنْ قُمْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فِدَاكَ أَبِي وَأُمِّي مَنْ هُمْ قَالَ ‏ ‏هُمْ الْأَكْثَرُونَ أَمْوَالًا إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا مِنْ بَيْنَ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَقَلِيلٌ مَا هُمْ مَا مِنْ صَاحِبِ إِبِلٍ وَلَا بَقَرٍ وَلَا غَنَمٍ لَا يُؤَدِّي زَكَاتَهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا كَانَتْ وَأَسْمَنَهُ تَنْطَحُهُ بِقُرُونِهَا ‏ ‏وَتَطَؤُهُ ‏ ‏بِأَظْلَافِهَا ‏ ‏كُلَّمَا نَفِدَتْ أُخْرَاهَا عَادَتْ عَلَيْهِ أُولَاهَا حَتَّى ‏ ‏يُقْضَى بَيْنَ النَّاسِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْمَعْرُورِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏ ‏انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ جَالِسٌ فِي ظِلِّ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ رَجُلٌ يَمُوتُ فَيَدَعُ إِبِلًا أَوْ بَقَرًا أَوْ غَنَمًا لَمْ يُؤَدِّ زَكَاتَهَا

நபி (ஸல்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த ஒருபோது நான் அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் “கஅபாவின் அதிபதிமீது ஆணை யாக! அவர்கள் நஷ்டவாளிகள்” என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் எழுந்து, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்), “அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர” என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, “ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ மாடோ ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரைக் கடைசிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை நீடிக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன் …” என்று தொடங்குகிறது.

“எனது உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! ஒருவர் ஒட்டகத்தையோ மாட்டையோ ஆட்டையோ அவற்றுக்குரிய ஸகாத்தை வழங்காத நிலையில் விட்டு விட்டு இறந்துவிடுவாராயின் …” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1651

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي إِسْمَعِيلَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ هِلَالٍ الْعَبْسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

‏جَاءَ نَاسٌ مِنْ ‏ ‏الْأَعْرَابِ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ نَاسًا مِنْ ‏ ‏الْمُصَدِّقِينَ ‏ ‏يَأْتُونَنَا فَيَظْلِمُونَنَا قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضُوا ‏ ‏مُصَدِّقِيكُمْ ‏‏قَالَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏مَا صَدَرَ عَنِّي مُصَدِّقٌ مُنْذُ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا وَهُوَ عَنِّي رَاضٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏


حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَعِيلَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசிகள் சிலர் வந்து, “எங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களில் சிலர் வரம்பு மீறி நடந்துகொள்கின்றார்கள்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களை(க் கனிவுடன் நடத்தி) திருப்தியடையச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறியதை நான் கேட்டதுமுதல், என்னிடம் ஸகாத் வசூலிக்க வந்த எவரும் என்னைக் குறித்து திருப்தி கொள்ளாமல் திரும்பிச்சென்றதில்லை.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1650

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ صَاحِبِ إِبِلٍ وَلَا بَقَرٍ وَلَا غَنَمٍ لَا يُؤَدِّي حَقَّهَا إِلَّا أُقْعِدَ لَهَا يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏بِقَاعٍ ‏ ‏قَرْقَرٍ ‏ ‏تَطَؤُهُ ‏ ‏ذَاتُ ‏ ‏الظِّلْفِ ‏ ‏بِظِلْفِهَا ‏ ‏وَتَنْطَحُهُ ذَاتُ الْقَرْنِ بِقَرْنِهَا لَيْسَ فِيهَا يَوْمَئِذٍ ‏ ‏جَمَّاءُ ‏ ‏وَلَا مَكْسُورَةُ الْقَرْنِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا حَقُّهَا قَالَ ‏ ‏إِطْرَاقُ فَحْلِهَا ‏ ‏وَإِعَارَةُ دَلْوِهَا ‏ ‏وَمَنِيحَتُهَا ‏ ‏وَحَلَبُهَا عَلَى الْمَاءِ وَحَمْلٌ عَلَيْهَا فِي سَبِيلِ اللَّهِ وَلَا مِنْ صَاحِبِ مَالٍ لَا يُؤَدِّي زَكَاتَهُ إِلَّا تَحَوَّلَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏شُجَاعًا ‏ ‏أَقْرَعَ يَتْبَعُ صَاحِبَهُ حَيْثُمَا ذَهَبَ وَهُوَ يَفِرُّ مِنْهُ وَيُقَالُ هَذَا مَالُكَ الَّذِي كُنْتَ تَبْخَلُ بِهِ فَإِذَا رَأَى أَنَّهُ لَا بُدَّ مِنْهُ أَدْخَلَ يَدَهُ فِي ‏ ‏فِيهِ ‏ ‏فَجَعَلَ ‏ ‏يَقْضَمُهَا ‏ ‏كَمَا ‏ ‏يَقْضَمُ ‏ ‏الْفَحْلُ

நபி (ஸல்), “ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால் குளம்புகள் உடையவை, தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை, தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது” என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவற்றுக்குரிய கடமைகள் என்ன?” என்று கேட்டோம். அதற்கு, “பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப்பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அன்பளிப்பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப்பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.

மேலும், “(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி, அவரை எங்குச் சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது “இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்” என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1649

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ ‏ ‏يَقُولُ :‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ صَاحِبِ إِبِلٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ قَطُّ وَقَعَدَ لَهَا ‏ ‏بِقَاعٍ ‏ ‏قَرْقَرٍ ‏ ‏تَسْتَنُّ ‏ ‏عَلَيْهِ بِقَوَائِمِهَا ‏ ‏وَأَخْفَافِهَا ‏ ‏وَلَا صَاحِبِ بَقَرٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وَقَعَدَ لَهَا ‏ ‏بِقَاعٍ ‏ ‏قَرْقَرٍ ‏ ‏تَنْطَحُهُ بِقُرُونِهَا ‏ ‏وَتَطَؤُهُ ‏ ‏بِقَوَائِمِهَا وَلَا صَاحِبِ غَنَمٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وَقَعَدَ لَهَا ‏ ‏بِقَاعٍ ‏ ‏قَرْقَرٍ ‏ ‏تَنْطَحُهُ بِقُرُونِهَا ‏ ‏وَتَطَؤُهُ ‏ ‏بِأَظْلَافِهَا ‏ ‏لَيْسَ فِيهَا ‏ ‏جَمَّاءُ ‏ ‏وَلَا مُنْكَسِرٌ قَرْنُهَا وَلَا صَاحِبِ ‏ ‏كَنْزٍ ‏ ‏لَا يَفْعَلُ فِيهِ حَقَّهُ إِلَّا جَاءَ كَنْزُهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏شُجَاعًا ‏ ‏أَقْرَعَ يَتْبَعُهُ فَاتِحًا فَاهُ فَإِذَا أَتَاهُ فَرَّ مِنْهُ ‏ ‏فَيُنَادِيهِ خُذْ كَنْزَكَ الَّذِي خَبَأْتَهُ فَأَنَا عَنْهُ غَنِيٌّ فَإِذَا رَأَى أَنْ لَا بُدَّ مِنْهُ ‏ ‏سَلَكَ ‏ ‏يَدَهُ فِي ‏ ‏فِيهِ ‏ ‏فَيَقْضَمُهَا ‏ ‏قَضْمَ ‏ ‏الْفَحْلِ ‏


‏قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عُبَيْدَ بْنَ عُمَيْرٍ ‏ ‏يَقُولُا ‏ ‏هَذَا الْقَوْلَ ثُمَّ سَأَلْنَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ مِثْلَ قَوْلِ ‏ ‏عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عُبَيْدَ بْنَ عُمَيْرٍ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْإِبِلِ قَالَ حَلَبُهَا عَلَى الْمَاءِ وَإِعَارَةُ دَلْوِهَا وَإِعَارَةُ فَحْلِهَا ‏ ‏وَمَنِيحَتُهَا ‏ ‏وَحَمْلٌ عَلَيْهَا فِي سَبِيلِ اللَّهِ

“ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்கார்ந்திருப்பார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.

மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்கார்ந்திருப்பார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்ந்திருப்பார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.

கருவூலச் செல்வங்க(ளான பொன், வெள்ளி போன்றவைக)ளை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்த நிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது, ‘நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக் கொள். அது எனக்கு வேண்டாம்’ என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்கள் :

இந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியதைப் போன்றே அறிவித்தார்கள்.

உபைத் பின் உமைர் (ரஹ்) அறிவிப்பில், ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்பளிப்பாக வழங்குவதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.