அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3293

وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ حَدَّثَنِي عُقَيْلُ، بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَانَ يُنَفِّلُ بَعْضَ مَنْ يَبْعَثُ مِنَ السَّرَايَا لأَنْفُسِهِمْ خَاصَّةً سِوَى قَسْمِ عَامَّةِ الْجَيْشِ وَالْخُمْسُ فِي ذَلِكَ وَاجِبٌ كُلِّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அறப்போருக்காகத் தாம் அனுப்பிவைக்கும் படைப் பிரிவினரில் சிலருக்கு மட்டும் பொதுப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்கு மேல் தனிப்பட்ட முறையில் (குமுஸ் நிதியிலிருந்து) அதிகப்படியாகவும் கொடுத்துவந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3292

وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، وَعَمْرٌو النَّاقِدُ، – وَاللَّفْظُ لِسُرَيْجٍ – قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

نَفَّلَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفَلاً سِوَى نَصِيبِنَا مِنَ الْخُمْسِ فَأَصَابَنِي شَارِفٌ وَالشَّارِفُ الْمُسِنُّ الْكَبِيرُ ‏


وَحَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، كِلاَهُمَا عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ بَلَغَنِي عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَفَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً بِنَحْوِ حَدِيثِ ابْنِ رَجَاءٍ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) போர் வெற்றிச் செல்வத்தில் எங்கள் பங்குகளைத் தந்ததோடு ‘குமுஸ்’ நிதியிலிருந்து அதிகப்படியாகவும் தந்தார்கள். அந்த வகையில் ஒரு வயது பூர்த்தியான பெரிய ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்தது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப் பிரிவுக்குப் போர் வெற்றிச் செல்வத்தில் (பங்கிட்டுக் கொடுத்ததுபோக) அதிகமாகவும் கொடுத்தார்கள் …” என்று ஆரம்பமாகி மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3291

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً إِلَى نَجْدٍ فَخَرَجْتُ فِيهَا فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا فَبَلَغَتْ سُهْمَانُنَا اثْنَىْ عَشَرَ بَعِيرًا وَنَفَّلَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعِيرًا بَعِيرًا


وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا يَحْيَى،  – وَهُوَ الْقَطَّانُ – عَنْ عُبَيْدِ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏

وَحَدَّثَنَاهُ أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ: كَتَبْتُ إِلَى نَافِعٍ، أَسْأَلُهُ عَنِ النَّفَلِ، فَكَتَبَ إِلَيَّ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ فِي سَرِيَّةٍ، ح وحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى، ح وحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஜ்துப் பகுதிக்குப் படைப் பிரிவு ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் நானும் புறப்பட்டுச் சென்றேன். (அப்போருக்குப் பின்) நிறைய ஒட்டகங்களையும் ஆடுகளையும் நாங்கள் (போர் வெற்றிச் செல்வமாகப்) பெற்றோம்.

எங்கள் பங்குகள், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகத்தை அதிகப்படியாகவும் தந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இப்னு அவ்னு (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் போர் வெற்றிச் செல்வங்களைப் பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதினேன். அப்போது நாஃபிஉ (ரஹ்), ‘இப்னு உமர் (ரலி) ஒரு படைப் பிரிவில் இருந்தார்கள்…’ என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு பதில் எழுதினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3290

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ سَرِيَّةً قِبَلَ نَجْدٍ وَفِيهِمُ ابْنُ عُمَرَ وَأَنَّ سُهْمَانَهُمْ بَلَغَتِ اثْنَىْ عَشَرَ بَعِيرًا وَنُفِّلُوا سِوَى ذَلِكَ بَعِيرًا فَلَمْ يُغَيِّرْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப் பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். (போர் வெற்றிச் செல்வங்களில்) எங்கள் பங்குகள், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்கள்வரை எட்டின.

இது போக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஒட்டகம் அதிகப்படியாகவும் தரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தப் பங்கீட்டை மாற்றவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3289

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً وَأَنَا فِيهِمْ قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا إِبِلاً كَثِيرَةً فَكَانَتْ سُهْمَانُهُمُ اثْنَى عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا

நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர் வெற்றிச் செல்வமாகப் பெற்றோம்.

எங்கள் பங்குகள், (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு அல்லது பதினோரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் கூடுதலாகவும் தரப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3288

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏

نَزَلَتْ فِيَّ أَرْبَعُ آيَاتٍ أَصَبْتُ سَيْفًا فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ نَفِّلْنِيهِ ‏.‏ فَقَالَ ‏”‏ ضَعْهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَامَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَامَ فَقَالَ نَفِّلْنِيهِ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏”‏ ضَعْهُ ‏”‏ ‏.‏ فَقَامَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ نَفِّلْنِيهِ أَأُجْعَلُ كَمَنْ لاَ غَنَاءَ لَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهَ ‏”‏ ‏.‏ قَالَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ‏}‏

என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடையாக வழங்குங்கள்” என்று கேட்டேன்.

நபியவர்கள், “அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகு நான் (அதைக் கொடையாக வழங்கக் கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள், “எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு” என்று சொன்னார்கள்.

பிறகு மீண்டும் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அதை எனக்குக் கொடையாக வழங்குங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) , “(இல்லை) அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகும் நான் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடையாக வழங்கிவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?” என்று கேட்டேன்.

அப்போதும் நபி (ஸல்), “எடுத்த இடத்திலேயே அதை வை!” என்று கூறினார்கள். அப்போதுதான் “(நபியே!) போர் வெற்றிச் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது’ என்று கூறுவீராக!” (8:1) எனும் எனும் இந்த வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3287

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏

أَخَذَ أَبِي مِنَ الْخُمْسِ سَيْفًا فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ هَبْ لِي هَذَا ‏.‏ فَأَبَى فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ‏}‏

என் தந்தை (ஸஅத் பின் அபீவக்காஸ்), ‘குமுஸ்’ (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து ஒரு வாளை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இதை எனக்குக் கொடையாக வழங்குங்கள்” என்று கேட்டார்கள்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) போர் வெற்றிச் செல்வங்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். ‘அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது’ என்று கூறுவீராக!” (8:1) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அன்னாரின் மகன் முஸ்அப் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3286

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا :‏

وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لاَ يَتْبَعْنِي رَجُلٌ قَدْ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ وَلاَ آخَرُ قَدْ بَنَى بُنْيَانًا وَلَمَّا يَرْفَعْ سُقُفَهَا وَلاَ آخَرُ قَدِ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ مُنْتَظِرٌ وِلاَدَهَا ‏.‏ قَالَ فَغَزَا فَأَدْنَى لِلْقَرْيَةِ حِينَ صَلاَةِ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ أَنْتِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَىَّ شَيْئًا ‏.‏ فَحُبِسَتْ عَلَيْهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ – قَالَ – فَجَمَعُوا مَا غَنِمُوا فَأَقْبَلَتِ النَّارُ لِتَأْكُلَهُ فَأَبَتْ أَنْ تَطْعَمَهُ فَقَالَ فِيكُمْ غُلُولٌ فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ ‏.‏ فَبَايَعُوهُ فَلَصِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ فَلْتُبَايِعْنِي قَبِيلَتُكَ ‏.‏ فَبَايَعَتْهُ – قَالَ – فَلَصِقَتْ بِيَدِ رَجُلَيْنِ أَوْ ثَلاَثَةٍ فَقَالَ فِيكُمُ الْغُلُولُ أَنْتُمْ غَلَلْتُمْ – قَالَ – فَأَخْرَجُوا لَهُ مِثْلَ رَأْسِ بَقَرَةٍ مِنْ ذَهَبٍ – قَالَ – فَوَضَعُوهُ فِي الْمَالِ وَهُوَ بِالصَّعِيدِ فَأَقْبَلَتِ النَّارُ فَأَكَلَتْهُ ‏.‏ فَلَمْ تَحِلَّ الْغَنَائِمُ لأَحَدٍ مِنْ قَبْلِنَا ذَلِكَ بِأَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَطَيَّبَهَا لَنَا ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

இறைத்தூதர்களுள் ஒருவர் (யூஷஉ பின் நூன்)  ஓர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம் “ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் உடலுறவைத் தொடங்க விரும்பி, உறவைத் தொடங்காமலிருப்பின் என்னைப் பின்பற்றி(ப் போருக்கு) வர வேண்டாம். (அவ்வாறே) வீடு கட்டி முடித்து, அதன் மேற்கூரையை உயர்த்தி முடிக்காமல் இருப்பவரும் என்னைப் பின்பற்றி(ப் போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, சினை ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் ஈனுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரும் என்னைப் பின்பற்றி(ப் போருக்கு) வர வேண்டாம்” என்று அறிவித்துவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்.

ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை, வெள்ளிக்கிழமை) அஸ்ருத் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக்குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, “நீ, இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு” என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் அம்மக்கள் போரில் கிடைத்த வெற்றிச் செல்வங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது (அக்கால வழக்கப்படி) அவற்றை(எரித்துச் சாம்பலாக்கி)ப் புசிக்கும் நெருப்பு வானிலிருந்து வந்தது. (ஆனால்) அவற்றைப் புசிக்கவில்லை. எனவே, அந்த இறைத்தூதர், “உங்களில் கையாடல் நடந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்” என்று கூறினார்.

அவ்வாறே அவர்களும் அவரிடம் சத்தியப் பிரமாணம் அளித்தனர். அப்போது ஒருவரின் கை, இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், “உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன்னுடைய குலத்தார் (ஒவ்வொருவரும்) என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்” என்று கூறினார்.

அவ்வாறே, அவர்கள் சத்தியப் பிரமாணம் அளிக்க, இருவரின் அல்லது மூவருடைய கை இறைத்தூதருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், “உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உள்ளது. நீங்கள்தாம் அதைக் கையாடல் செய்துள்ளீர்கள்” என்று கூறினார்.

ஆகவே, அக்குலத்தார் பசுமாட்டின் தலை அளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து, மண் தரையில் இருந்த பொருட்களுடன் வைத்தனர். உடனே (வானிலிருந்து) நெருப்பு வந்து அதைப் புசித்தது. (முற்காலங்களில் போர் வெற்றிச் செல்வங்கள் இப்படித்தான் செய்யப்பட்டன).

நமக்கு முன்னால் யாருக்கும் போர் வெற்றிச் செல்வங்கள் (பயன்படுத்திக்கொள்ள) அனுமதிக்கப்படவில்லை. (பின்னர் நமக்கு அப்பொருட்களைப் பயன்படுத்த அல்லாஹ் அனுமதியளித்தான்). வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு, அவற்றை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கினான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 32, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3285

وَحَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، أَخْبَرَنِي عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ :‏

حَرَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَخْلَ بَنِي النَّضِيرِ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை எரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3284

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطَعَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَحَرَّقَ وَلَهَا يَقُولُ حَسَّانُ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ وَفِي ذَلِكَ نَزَلَتْ ‏{مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا‏}‏ الآيَةَ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை வெட்டினார்கள்; (சில மரங்களை) எரித்தார்கள். அந்த நிகழ்வு குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) பின்வருமாறு பாடினார்கள்:

புவைராவில்
கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு
பனூ லுஅய் குலத்தாரின்
(கையாலாகாத) தலைவர்களுக்கு
எளிதாகிவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே “நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் தூரோடு அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன” (59:5) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)