حَدَّثَنَا أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ حَدَّثَنَا الْجُرَيْرِيُّ
عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ:
قُلْتُ لِابْنِ عَبَّاسٍ أَرَأَيْتَ هَذَا الرَّمَلَ بِالْبَيْتِ ثَلَاثَةَ أَطْوَافٍ وَمَشْيَ أَرْبَعَةِ أَطْوَافٍ أَسُنَّةٌ هُوَ فَإِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّهُ سُنَّةٌ قَالَ فَقَالَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ قُلْتُ مَا قَوْلُكَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مَكَّةَ فَقَالَ الْمُشْرِكُونَ إِنَّ مُحَمَّدًا وَأَصْحَابَهُ لَا يَسْتَطِيعُونَ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ مِنْ الْهُزَالِ وَكَانُوا يَحْسُدُونَهُ قَالَ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْمُلُوا ثَلَاثًا وَيَمْشُوا أَرْبَعًا قَالَ قُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ الطَّوَافِ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ رَاكِبًا أَسُنَّةٌ هُوَ فَإِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّهُ سُنَّةٌ قَالَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ قُلْتُ وَمَا قَوْلُكَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثُرَ عَلَيْهِ النَّاسُ يَقُولُونَ هَذَا مُحَمَّدٌ هَذَا مُحَمَّدٌ حَتَّى خَرَجَ الْعَوَاتِقُ مِنْ الْبُيُوتِ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُضْرَبُ النَّاسُ بَيْنَ يَدَيْهِ فَلَمَّا كَثُرَ عَلَيْهِ رَكِبَ وَالْمَشْيُ وَالسَّعْيُ أَفْضَلُ
و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَزِيدُ أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَانَ أَهْلُ مَكَّةَ قَوْمَ حَسَدٍ وَلَمْ يَقُلْ يَحْسُدُونَهُ
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பதும் பிந்திய நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடப்பதுமான ‘ரமல்’ பற்றி என்ன கருதுகிறீர்கள்? அது நபிவழியா? ஏனெனில், உங்களுடைய சமூகத்தார் அதை நபிவழியெனக் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள்.
நான் “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்தபோது இணைவைப்பாளர்கள், ‘முஹம்மதும் அவருடைய தோழர்களும் (மதீனாவிற்குப் போய்) மெலிந்துவிட்டதால் அவர்களால் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வர முடியாது’ என்று கூறினர். நபியவர்கள் மீது இணைவைப்பாளர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடக்குமாறும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடக்குமாறும் கட்டளையிட்டார்கள்” என்றார்கள்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “வாகனத்தில் அமர்ந்தவாறு ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது (ஸயீ) பற்றி எனக்குக் கூறுங்கள். அது நபிவழியா? ஏனெனில், உங்கள் சமூகத்தார் அதையும் நபிவழியெனக் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள். நான், “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?” என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்தபோது) அவர்களைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் ‘இதோ முஹம்மத்!; இதோ முஹம்மத்!’ எனக் கூறியவாறு திரண்டுவிட்டனர். இல்லங்களிலிருந்து இளம்பெண்கள்கூட வெளியே வந்து விட்டனர். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக மக்கள் விரட்டப்படுவதில்லை. எனவே, ஏராளமான மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டதால் வாகனத்தில் (அமர்ந்தவாறு ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி) வந்தார்கள். ஆயினும், (ஸயீயின்போது) நடப்பதும் ஓடுவதுமே சிறந்ததாகும்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி)
குறிப்பு :
யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “மக்காவாசிகள் பொறாமை கொண்ட சமுதாயத்தவராக இருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.