அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4469

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، – يَعْنِي ابْنَ سَعْدٍ – عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، ح

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا فَاطِمَةَ ابْنَتَهُ فَسَارَّهَا فَبَكَتْ ثُمَّ سَارَّهَا فَضَحِكَتْ فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِفَاطِمَةَ مَا هَذَا الَّذِي سَارَّكِ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَكَيْتِ ثُمَّ سَارَّكِ فَضَحِكْتِ قَالَتْ سَارَّنِي فَأَخْبَرَنِي بِمَوْتِهِ فَبَكَيْتُ ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ مَنْ يَتْبَعُهُ مِنْ أَهْلِهِ فَضَحِكْتُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து, அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.

நான் ஃபாத்திமாவிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல, அதைக் கேட்டு நீங்கள் அழுதீர்கள். பிறகு உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது நீங்கள் சிரித்தீர்களே, அது என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு ஃபாத்திமா, “என்னிடம் இரகசியமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இந்த நோயிலேயே) தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு அவர்களின் குடும்பத்தாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான்தான் என்று இரகசியமாகச் சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4468

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ :‏

أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ وَعِنْدَهُ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا سَمِعَتْ بِذَلِكَ فَاطِمَةُ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ لَهُ إِنَّ قَوْمَكَ يَتَحَدَّثُونَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ وَهَذَا عَلِيٌّ نَاكِحًا ابْنَةَ أَبِي جَهْلٍ ‏.‏ قَالَ الْمِسْوَرُ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ ثُمَّ قَالَ ‏ “‏ أَمَّا بَعْدُ فَإِنِّي أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ فَحَدَّثَنِي فَصَدَقَنِي وَإِنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ مُضْغَةٌ مِنِّي وَإِنَّمَا أَكْرَهُ أَنْ يَفْتِنُوهَا وَإِنَّهَا وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ وَاحِدٍ أَبَدًا ‏”‏ ‏.‏ قَالَ فَتَرَكَ عَلِيٌّ الْخِطْبَةَ


وَحَدَّثَنِيهِ أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا وَهْبٌ، – يَعْنِي ابْنَ جَرِيرٍ – عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ، – يَعْنِي ابْنَ رَاشِدٍ – يُحَدِّثُ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) தம்மிடம் (மனைவியாக) இருக்கும்போதே, அபூஜஹ்லுடைய மகளை(இரண்டாவது மனைவியாக மணந்துகொள்ள) அலீ பின் அபீதாலிப் (ரலி) பெண் பேசினார்கள்.

அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் உங்களுடைய மகள்களு(க்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்)காகக் கோபப்படமாட்டீர்கள் என்று உங்கள் சமுதாயத்தார் பேசிக்கொள்கின்றனர். இந்த (உங்கள் மருமகன்) அலீ, அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உரையாற்ற) எழுந்தார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு,

“இறைவாழ்த்துக்குப்பின்! அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கு (என் மகள் ஸைனபை) நான் மணமுடித்துவைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியை மதீனாவுக்கு அனுப்பிவைப்பதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். முஹம்மதின் மகள் ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். என் மகளை (அவருடைய மார்க்க விஷயத்தில், அபூஜஹ்லின் குடும்பத்தார்) குழப்பிவிடுவதை நான் வெறுக்கின்றேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் (மனைவிகளாக) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது” என்று கூறியதை நான் கேட்டேன்.

அதன் பிறகு அலீ (ரலி) (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4467

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيُّ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ الْحُسَيْنِ حَدَّثَهُ :‏

أَنَّهُمْ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رضى الله عنهما لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَىَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا قَالَ فَقُلْتُ لَهُ لاَ ‏.‏ قَالَ لَهُ هَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ وَايْمُ اللَّهِ لَئِنْ أَعْطَيْتَنِيهِ لاَ يُخْلَصُ إِلَيْهِ أَبَدًا حَتَّى تَبْلُغَ نَفْسِي إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ ‏”‏ إِنَّ فَاطِمَةَ مِنِّي وَإِنِّي أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ فَأَحْسَنَ قَالَ ‏”‏ حَدَّثَنِي فَصَدَقَنِي وَوَعَدَنِي فَأَوْفَى لِي وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلاً وَلاَ أُحِلُّ حَرَامًا وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ مَكَانًا وَاحِدًا أَبَدًا ‏”‏

நாங்கள் (எங்கள் தந்தை) ஹுஸைன் பின் அலீ (ரலி) கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) சந்தித்தார்கள்.

அப்போது அவர்கள், “என்னிடம் உங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுவீர்களா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், “அப்படி ஏதுமில்லை” என்று பதிலளித்தேன்.

மிஸ்வர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கின்றீர்களா? ஏனெனில், அந்த(பனூ உமய்யா)க் கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது” என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)

ஃபாத்திமா (ரலி) (மனைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அது குறித்து மக்களிடம் அவர்களது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றபோது, பருவ வயதை அடைந்துவிட்டிருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் ஐயுறுகின்றேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸு குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் (அபுல்ஆஸ் பின் ரபீஆ) பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள். அப்போது அவர்கள், “அவர் என்னிடம் சொன்னதை உண்மைப்படுத்தினார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.

மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன் (அலீ இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை நான் தடுக்க முடியாது).

ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதி(அபூஜஹ்லு) மகளும் ஒரே ஆணிடம் (மனைவியராக) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) வழியாக அலீ பின் அல்ஹுஸைன் (ரஹ்)


குறிப்பு :

பனூ அப்தி ஷம்ஸு குலத்தைச் சேர்ந்த அபுல் ஆஸ் பின் ரபீஆ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி) அவர்களின் கணவராவார்.

அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4466

حَدَّثَنِي أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّمَا فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي يُؤْذِينِي مَا آذَاهَا ‏”‏

“ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4465

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، قَالَ ابْنُ يُونُسَ حَدَّثَنَا لَيْثٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ الْقُرَشِيُّ التَّيْمِيُّ أَنَّحَدَّثَهُ :‏

أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ ‏ “‏ إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُونِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلاَ آذَنُ لَهُمْ ثُمَّ لاَ آذَنُ لَهُمْ ثُمَّ لاَ آذَنُ لَهُمْ إِلاَّ أَنْ يُحِبَّ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا ابْنَتِي بَضْعَةٌ مِنِّي يَرِيبُنِي مَا رَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, “ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார், உங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதி அளிக்கமாட்டேன். பின்னும் அவர்களுக்கு நான் அனுமதி அளிக்கமாட்டேன். பின்னும் அவர்களுக்கு நான் அனுமதி அளிக்கமாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்கமாட்டேன்).

அலீ பின் அபீதாலிப், என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). என் மகள் (ஃபாத்திமா), என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4472

حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الْقَيْسِيُّ، كِلاَهُمَا عَنِ الْمُعْتَمِرِ، – قَالَ ابْنُ حَمَّادٍ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، – قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ قَالَ :‏

لاَ تَكُونَنَّ إِنِ اسْتَطَعْتَ أَوَّلَ مَنْ يَدْخُلُ السُّوقَ وَلاَ آخِرَ مَنْ يَخْرُجُ مِنْهَا فَإِنَّهَا مَعْرَكَةُ الشَّيْطَانِ وَبِهَا يَنْصِبُ رَايَتَهُ ‏

قَالَ وَأُنْبِئْتُ أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ أَتَى نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ – قَالَ – فَجَعَلَ يَتَحَدَّثُ ثُمَّ قَامَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم لأُمِّ سَلَمَةَ ‏ “‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ أَوْ كَمَا قَالَ قَالَتْ هَذَا دِحْيَةُ – قَالَ – فَقَالَتْ أُمُّ سَلَمَةَ ايْمُ اللَّهِ مَا حَسِبْتُهُ إِلاَّ إِيَّاهُ حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم يُخْبِرُ خَبَرَنَا أَوْ كَمَا قَالَ قَالَ فَقُلْتُ لأَبِي عُثْمَانَ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏.‏

ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), “உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கின்றான்” என்று கூறினார்கள்.

“மேலும் (பின்வருமாறும்) எனக்குச் செய்தி எட்டியது” என்று (அறிவிப்பாளர்) அபூஉஸ்மான் (ரஹ்) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் மனைவி) உம்முஸலமா (ரலி) இருந்தபோது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) (ஒரு மனிதரின் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எழுந்து (சென்று)விட்டார்கள்.

அப்போது நபி (ஸல்) உம்முஸலமா (ரலி) அவர்களிடம் “இவர் யார் (தெரியுமா)?” என்றோ, அது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்முஸலமா (ரலி), “இவர் (உங்களுடைய தோழர்) திஹ்யா” என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் ஏதும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்கள்).

“அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பேசிக்கொண்ட விஷயம் குறித்து (மக்களிடையே) நபி (ஸல்) நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை அ(ப்போது வந்த)வர் திஹ்யா என்றே நினைத்திருந்தேன்” என்று உம்முஸலமா (ரலி) கூறினார்கள்:

(அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்:

நான் (இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த) அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை நீங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4473

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى السِّيْنَانِيُّ، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَسْرَعُكُنَّ لَحَاقًا بِي أَطْوَلُكُنَّ يَدًا ‏”‏ ‏.‏ قَالَتْ فَكُنَّ يَتَطَاوَلْنَ أَيَّتُهُنَّ أَطْوَلُ يَدًا ‏.‏ قَالَتْ فَكَانَتْ أَطْوَلَنَا يَدًا زَيْنَبُ لأَنَّهَا كَانَتْ تَعْمَلُ بِيَدِهَا وَتَصَدَّقُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மனைவியரான எங்களிடம்), “(என் மரணத்திற்குப்பின்) உங்களில் கை நீளமானவரே என்னிடம் முதலில் வந்து சேருவார்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் (ஒரு குச்சியை எடுத்து), அவர்களுள் நீளமான கைகளை உடையவர் யார் என்று அளந்துபார்க்கலாயினர். (உண்மையில்) எங்களில் ஸைனப் (ரலி) அவர்களே கைத்தொழில் செய்து, – (அதிகமாக) தர்மம் செய்யக்கூடிய – கை நீளமானவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 20, ஹதீஸ் எண்: 4479

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

مَاتَ ابْنٌ لأَبِي طَلْحَةَ مِنْ أُمِّ سُلَيْمٍ فَقَالَتْ لأَهْلِهَا لاَ تُحَدِّثُوا أَبَا طَلْحَةَ بِابْنِهِ حَتَّى أَكُونَ أَنَا أُحَدِّثُهُ – قَالَ – فَجَاءَ فَقَرَّبَتْ إِلَيْهِ عَشَاءً فَأَكَلَ وَشَرِبَ – فَقَالَ – ثُمَّ تَصَنَّعَتْ لَهُ أَحْسَنَ مَا كَانَ تَصَنَّعُ قَبْلَ ذَلِكَ فَوَقَعَ بِهَا فَلَمَّا رَأَتْ أَنَّهُ قَدْ شَبِعَ وَأَصَابَ مِنْهَا قَالَتْ يَا أَبَا طَلْحَةَ أَرَأَيْتَ لَوْ أَنَّ قَوْمًا أَعَارُوا عَارِيَتَهُمْ أَهْلَ بَيْتٍ فَطَلَبُوا عَارِيَتَهُمْ أَلَهُمْ أَنْ يَمْنَعُوهُمْ قَالَ لاَ ‏.‏ قَالَتْ فَاحْتَسِبِ ابْنَكَ ‏.‏ قَالَ فَغَضِبَ وَقَالَ تَرَكْتِنِي حَتَّى تَلَطَّخْتُ ثُمَّ أَخْبَرْتِنِي بِابْنِي ‏.‏ فَانْطَلَقَ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِمَا كَانَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ بَارَكَ اللَّهُ لَكُمَا فِي غَابِرِ لَيْلَتِكُمَا ‏”‏ ‏.‏ قَالَ فَحَمَلَتْ – قَالَ – فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ وَهِيَ مَعَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَى الْمَدِينَةَ مِنْ سَفَرٍ لاَ يَطْرُقُهَا طُرُوقًا فَدَنَوْا مِنَ الْمَدِينَةِ فَضَرَبَهَا الْمَخَاضُ فَاحْتُبِسَ عَلَيْهَا أَبُو طَلْحَةَ وَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم – قَالَ – يَقُولُ أَبُو طَلْحَةَ إِنَّكَ لَتَعْلَمُ يَا رَبِّ إِنَّهُ يُعْجِبُنِي أَنْ أَخْرُجَ مَعَ رَسُولِكَ إِذَا خَرَجَ وَأَدْخُلَ مَعَهُ إِذَا دَخَلَ وَقَدِ احْتُبِسْتُ بِمَا تَرَى – قَالَ – تَقُولُ أُمُّ سُلَيْمٍ يَا أَبَا طَلْحَةَ مَا أَجِدُ الَّذِي كُنْتُ أَجِدُ انْطَلِقْ ‏.‏ فَانْطَلَقْنَا – قَالَ – وَضَرَبَهَا الْمَخَاضُ حِينَ قَدِمَا فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَتْ لِي أُمِّي يَا أَنَسُ لاَ يُرْضِعُهُ أَحَدٌ حَتَّى تَغْدُوَ بِهِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَلَمَّا أَصْبَحَ احْتَمَلْتُهُ فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – قَالَ – فَصَادَفْتُهُ وَمَعَهُ مِيسَمٌ فَلَمَّا رَآنِي قَالَ ‏”‏ لَعَلَّ أُمَّ سُلَيْمٍ وَلَدَتْ ‏”‏ ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ فَوَضَعَ الْمِيسَمَ – قَالَ – وَجِئْتُ بِهِ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ وَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَجْوَةٍ مِنْ عَجْوَةِ الْمَدِينَةِ فَلاَكَهَا فِي فِيهِ حَتَّى ذَابَتْ ثُمَّ قَذَفَهَا فِي فِي الصَّبِيِّ فَجَعَلَ الصَّبِيُّ يَتَلَمَّظُهَا – قَالَ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ انْظُرُوا إِلَى حُبِّ الأَنْصَارِ التَّمْرَ ‏”‏ ‏.‏ قَالَ فَمَسَحَ وَجْهَهُ وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ مَاتَ ابْنٌ لأَبِي طَلْحَةَ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ ‏

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு (அவர்களின் இரண்டாவது கணவர்) அபூதல்ஹா (ரலி) மூலம் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது. அப்போது உம்மு ஸுலைம் (ரலி) தம் குடும்பத்தாரிடம், “(என் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அவருடைய மகன் (இறந்ததைப்) பற்றி நானாகச் சொல்லாத வரையில் நீங்கள் சொல்ல வேண்டாம்” என்று கூறினார்கள். (வெளியூர் சென்றிருந்த) அபூதல்ஹா (ரலி) (வீட்டுக்கு) வந்தபோது, அவருக்கு அருகில் என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) இரவு உணவை வைத்தார்கள். அபூதல்ஹா (ரலி) உணவை உண்டார்கள்; பருகினார்கள்.

பிறகு உம்மு ஸுலைம் (ரலி) (துயரத்தை மறைத்துக்கொண்டு) கணவருக்காக முன்பு எப்போதும் அலங்கரித்துக்கொள்வதைவிட அழகாகத் தம்மை அலங்காரம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டனர்.

கணவரின் பசி அடங்கி, தம்மிடம் (தேவையானதை) அனுபவித்துக்கொண்டதைக் கண்டபின், “அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்து, பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத் தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தர முடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி), “இல்லை” என்று கூறினார்கள்.

உம்மு ஸுலைம் (ரலி), “அவ்வாறாயின், உங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்” என்று கூறினார்கள். (தம்முடைய மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட) அபூதல்ஹா (ரலி) கோபப்பட்டார்கள். “நான் (இன்பத்தில்) தோய்ந்திருக்கும்வரை (இதைப் பற்றி என்னிடம் சொல்லாமல்) விட்டுவிட்டு, இப்போது என் மகனைப் பற்றிச் சொல்கிறாயே!” என்று கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!” என்று பிரார்த்தித்தார்கள். பின்னர்  உம்மு ஸுலைம் (ரலி) கருவுற்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தில் இருந்தபோது அவர்களுடன் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு மதீனாவுக்கு வந்தால் இரவு நேரத்தில் தமது வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள் – அவ்வழக்கப்படியே அவர்கள் மதீனாவை நெருங்கியபோது உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. இதனால் ஊருக்குள் செல்ல முடியாமல் அபூதல்ஹா (ரலி) தடுக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனா) சென்றார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி), “என் இறைவா! உன் தூதர் (ஸல்) (ஊரிலிருந்து) புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் நானும் புறப்பட்டுச் செல்வதும், அவர்கள் திரும்பி (ஊருக்குள்) நுழையும்போது அவர்களுடன் நானும் நுழைவதும்தான் எனக்கு விருப்பமானது என்பதை நீ அறிவாய். ஆனால், (இப்போது) நான் ஊருக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டேன். இதை நீயே பார்க்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது உம்மு ஸுலைம் (ரலி), “அபூதல்ஹா அவர்களே! நான் உணர்ந்துவந்த (வலி) எதையும் (இப்போது) நான் உணரவில்லை” என்று கூறிவிட்டு, “நீங்கள் செல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.

அவ்விருவரும் ஊருக்குள் நுழைந்தபோது என் தாயாருக்கு (மீண்டும்) பிரசவ வலி ஏற்பட்டு, அவர் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அப்போது என்னிடம் என் தாயார், “அனஸே! இந்தக் குழந்தையை நீ காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லும் வரையில் அவனுக்கு யாரும் பாலூட்டிவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே காலை நேரமானதும், நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அடையாளமிடும் கருவியுடன் (தமது ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக்கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.

என்னை அவர்கள் கண்டதும், “உம்மு ஸுலைமுக்குக் குழந்தை பிறந்துவிட்டது போலும்!” என்றார்கள். நான் “ஆம்“ என்றேன். உடனே அவர்கள் அடையாளமிடும் கருவியை (கீழே) வைத்துவிட்டார்கள். நான் குழந்தையைக் கொண்டுபோய் அவர்களது மடியில் வைத்தேன்.

அப்போது அவர்கள் மதீனாவின் (உயர் ரகப் பேரீச்சம் பழமான) ‘அஜ்வா’க்களில் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அதைத் தமது வாயிலிட்டு நன்றாக மென்று கூழாக்கி, குழந்தையின் வாயில் இட்டார்கள். குழந்தை நாக்கைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரிகளுக்குப் பேரீச்சம் பழத்தின் மீதுள்ள விருப்பத்தைப் பாருங்கள்!” என்று கூறிவிட்டு, குழந்தையின் முகத்தைத் தடவி அதற்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அம்ரிப்னு ஆஸிம் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூதல்ஹா (ரலி) அவர்களின் மகன் ஒருவர் இறந்துவிட்டார்” என்று ஆரம்பமாகி, மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 44, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4474

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ:‏

انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُمِّ أَيْمَنَ فَانْطَلَقْتُ مَعَهُ فَنَاوَلَتْهُ إِنَاءً فِيهِ شَرَابٌ – قَالَ – فَلاَ أَدْرِي أَصَادَفَتْهُ صَائِمًا أَوْ لَمْ يُرِدْهُ فَجَعَلَتْ تَصْخَبُ عَلَيْهِ وَتَذَمَّرُ عَلَيْهِ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றபோது அவர்களுடன் நானும் சென்றேன்.

உம்மு அய்மன் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பாளியாக இருந்தார்களோ, அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ எனக்குத் தெரியாது. (அதை அவர்கள் பருக மறுத்துவிட்டார்கள்).

அதற்காக உம்மு அய்மன் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்துகொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 14, ஹதீஸ் எண்: 4464

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَأَحْمَدُ بْنُ جَنَابٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى، – وَاللَّفْظُ لاِبْنِ حُجْرٍ – حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ :‏ ‏

جَلَسَ إِحْدَى عَشْرَةَ امْرَأَةً فَتَعَاهَدْنَ وَتَعَاقَدْنَ أَنْ لاَ يَكْتُمْنَ مِنْ أَخْبَارِ أَزْوَاجِهِنَّ شَيْئًا قَالَتِ الأُولَى زَوْجِي لَحْمُ جَمَلٍ غَثٌّ عَلَى رَأْسِ جَبَلٍ وَعْرٍ لاَ سَهْلٌ فَيُرْتَقَى وَلاَ سَمِينٌ فَيُنْتَقَلَ ‏.‏ قَالَتِ الثَّانِيَةُ زَوْجِي لاَ أَبُثُّ خَبَرَهُ إِنِّي أَخَافُ أَنْ لاَ أَذَرَهُ إِنْ أَذْكُرْهُ أَذْكُرْ عُجَرَهُ وَبُجَرَهُ ‏.‏ قَالَتِ الثَّالِثَةُ زَوْجِي الْعَشَنَّقُ إِنْ أَنْطِقْ أُطَلَّقْ وَإِنْ أَسْكُتْ أُعَلَّقْ ‏.‏ قَالَتِ الرَّابِعَةُ زَوْجِي كَلَيْلِ تِهَامَةَ لاَ حَرٌّ وَلاَ قُرٌّ وَلاَ مَخَافَةَ وَلاَ سَآمَةَ ‏.‏ قَالَتِ الْخَامِسَةُ زَوْجِي إِنْ دَخَلَ فَهِدَ وَإِنْ خَرَجَ أَسِدَ وَلاَ يَسْأَلُ عَمَّا عَهِدَ ‏.‏ قَالَتِ السَّادِسَةُ زَوْجِي إِنْ أَكَلَ لَفَّ وَإِنْ شَرِبَ اشْتَفَّ وَإِنِ اضْطَجَعَ الْتَفَّ وَلاَ يُولِجُ الْكَفَّ لِيَعْلَمَ الْبَثَّ ‏.‏ قَالَتِ السَّابِعَةُ زَوْجِي غَيَايَاءُ أَوْ عَيَايَاءُ طَبَاقَاءُ كُلُّ دَاءٍ لَهُ دَاءٌ شَجَّكِ أَوْ فَلَّكِ أَوْ جَمَعَ كُلاًّ لَكِ ‏.‏ قَالَتِ الثَّامِنَةُ زَوْجِي الرِّيحُ رِيحُ زَرْنَبٍ وَالْمَسُّ مَسُّ أَرْنَبٍ ‏.‏ قَالَتِ التَّاسِعَةُ زَوْجِي رَفِيعُ الْعِمَادِ طَوِيلُ النِّجَادِ عَظِيمُ الرَّمَادِ قَرِيبُ الْبَيْتِ مِنَ النَّادِي ‏.‏ قَالَتِ الْعَاشِرَةُ زَوْجِي مَالِكٌ وَمَا مَالِكٌ مَالِكٌ خَيْرٌ مِنْ ذَلِكِ لَهُ إِبِلٌ كَثِيرَاتُ الْمَبَارِكِ قَلِيلاَتُ الْمَسَارِحِ إِذَا سَمِعْنَ صَوْتَ الْمِزْهَرِ أَيْقَنَّ أَنَّهُنَّ هَوَالِكُ ‏.‏ قَالَتِ الْحَادِيَةَ عَشْرَةَ زَوْجِي أَبُو زَرْعٍ فَمَا أَبُو زَرْعٍ أَنَاسَ مِنْ حُلِيٍّ أُذُنَىَّ وَمَلأَ مِنْ شَحْمٍ عَضُدَىَّ وَبَجَّحَنِي فَبَجِحَتْ إِلَىَّ نَفْسِي وَجَدَنِي فِي أَهْلِ غُنَيْمَةٍ بِشَقٍّ فَجَعَلَنِي فِي أَهْلِ صَهِيلٍ وَأَطِيطٍ وَدَائِسٍ وَمُنَقٍّ فَعِنْدَهُ أَقُولُ فَلاَ أُقَبَّحُ وَأَرْقُدُ فَأَتَصَبَّحُ وَأَشْرَبُ فَأَتَقَنَّحُ ‏.‏ أُمُّ أَبِي زَرْعٍ فَمَا أُمُّ أَبِي زَرْعٍ عُكُومُهَا رَدَاحٌ وَبَيْتُهَا فَسَاحٌ ‏.‏ ابْنُ أَبِي زَرْعٍ فَمَا ابْنُ أَبِي زَرْعٍ مَضْجِعُهُ كَمَسَلِّ شَطْبَةٍ وَيُشْبِعُهُ ذِرَاعُ الْجَفْرَةِ ‏.‏ بِنْتُ أَبِي زَرْعٍ فَمَا بِنْتُ أَبِي زَرْعٍ طَوْعُ أَبِيهَا وَطَوْعُ أُمِّهَا وَمِلْءُ كِسَائِهَا وَغَيْظُ جَارَتِهَا ‏.‏ جَارِيَةُ أَبِي زَرْعٍ فَمَا جَارِيَةُ أَبِي زَرْعٍ لاَ تَبُثُّ حَدِيثَنَا تَبْثِيثًا وَلاَ تُنَقِّثُ مِيرَتَنَا تَنْقِيثًا وَلاَ تَمْلأُ بَيْتَنَا تَعْشِيشًا ‏.‏ قَالَتْ خَرَجَ أَبُو زَرْعٍ وَالأَوْطَابُ تُمْخَضُ فَلَقِيَ امْرَأَةً مَعَهَا وَلَدَانِ لَهَا كَالْفَهْدَيْنِ يَلْعَبَانِ مِنْ تَحْتِ خَصْرِهَا بِرُمَّانَتَيْنِ فَطَلَّقَنِي وَنَكَحَهَا فَنَكَحْتُ بَعْدَهُ رَجُلاً سَرِيًّا رَكِبَ شَرِيًّا وَأَخَذَ خَطِّيًّا وَأَرَاحَ عَلَىَّ نَعَمًا ثَرِيًّا وَأَعْطَانِي مِنْ كُلِّ رَائِحَةٍ زَوْجًا ‏.‏ قَالَ كُلِي أُمَّ زَرْعٍ وَمِيرِي أَهْلَكِ فَلَوْ جَمَعْتُ كُلَّ شَىْءٍ أَعْطَانِي مَا بَلَغَ أَصْغَرَ آنِيَةِ أَبِي زَرْعٍ ‏.‏ قَالَتْ عَائِشَةُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كُنْتُ لَكِ كَأَبِي زَرْعٍ لأُمِّ زَرْعٍ ‏”‏ ‏.‏


وَحَدَّثَنِيهِ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ عَيَايَاءُ طَبَاقَاءُ ‏.‏ وَلَمْ يَشُكَّ وَقَالَ قَلِيلاَتُ الْمَسَارِحِ ‏.‏ وَقَالَ وَصِفْرُ رِدَائِهَا وَخَيْرُ نِسَائِهَا وَعَقْرُ جَارَتِهَا ‏.‏ وَقَالَ وَلاَ تَنْقُثُ مِيرَتَنَا تَنْقِيثًا ‏.‏ وَقَالَ وَأَعْطَانِي مِنْ كُلِّ ذَابِحَةٍ زَوْجًا

பதினொரு பெண்கள் (முற்காலத்தில் ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறைக்காமல் உரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

முதலாவது பெண் கூறினார்: என் கணவர் (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும் அதை எடுக்க) மேலே செல்வதற்கு, (அந்த மலைப் பாதை) எளிதானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (நினைத்தாலும் அது) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.

இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற ஐயமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்களைத்தான் கூற வேண்டியதிருக்கும்.

மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி(அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடியாக வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.)

நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்றவர் (இதமானவர்). (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவர்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழைந்தால், சிறுத்தையாகிவிடுவார். வெளியே போனால் சிங்கமாகிவிடுவார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த(குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார்.

ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுவார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுவார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கின்றார். என் சஞ்சலத்தை அறிந்து, தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.

ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் விவரமில்லாதவர் அல்லது ஆண்மையில்லாதவர்; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் நீ பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார்.

எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் முகர்வதற்கு மரிக்கொழுந்தைப் போன்று மணக்கக்கூடியவர்; தொடுவதற்கு முயலைப் போன்ற(மிருதுவான மேனி உடைய)வர்.

ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட(உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு, வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்திருப்பவர்.

பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர். எத்துணை பெரும் செல்வந்தர் தெரியுமா? எல்லாச் செல்வந்தர்களையும்விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால், தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும்.

பதினொன்றாவது பெண் (உம்மு ஸர்உ) கூறினார்: என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? அணிகலன்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) எனது தோள்களைக் கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருந்தது. ஒரு மலைக் குகையில் (அல்லது ‘ஷிக்’ எனுமிடத்தில்) சிறிய ஆட்டு மந்தையுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று,) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.

நான் அவரிடம் (சுதந்திரமாகப்) பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரை தூங்குவேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினலும் பெருமிதப்படும் அளவுக்கு (உண்பேன்) பருகுவேன்.

(என் மாமியார்) ‘உம்மு அபீஸர்உ’ எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுத் தானியக் களஞ்சியம் (எப்போதும்) நிறைந்திருக்கும். அவரது வீடு விசாலமானது.

(என் கணவரின் மகன்) ‘இப்னு அபீ ஸர்உ’ எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை உருவப்பட்ட கோரையைப் போன்று (அல்லது உறையிலருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று மெல்லியதாக) இருக்கும். (கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்) ஓர் ஆட்டுக் குட்டியின் சப்பை (இறைச்சி) அவரது வயிற்றை நிறைத்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்).

(என் கணவரின் மகள்) பின்த்து அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய்-தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல்வாகு கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.

(என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவர் தெரியுமா? அவள் எங்கள் (இரகசியச்) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருட்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை-கூளங்கள் சேர விடுவதுமில்லை. (நம்பிக்கையானவள்; பொறுப்பு மிக்கவள்; தூய்மை விரும்பி).

பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால) ஓர் அதிகாலை நேரம் (என் கணவர்) அபூஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அவளது இடுப்புக்குக் கீழே (மடியில்) இருந்து இரு மாதுளங்கனிகளை(ஒத்த கொங்கைகளை)த் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனத்தைப் பறிகொடுத்து) என்னை மணவிலக்குச் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக்கொண்டார்.

அவருக்குப் பின்னர், இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அவர் அதி விரைவாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்து’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டியொன்றைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார். “(இவற்றை அறுத்து) உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு; உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.

(ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாய்க் குவித்தாலும், அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தின் அந்தஸ்தைக்கூட அவை எட்டமாட்டா.

(ஆயிஷா கூறுகிறார்கள்:) (என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “(ஆயிஷாவே!) உம்மு ஸர்வுக்கு, அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (சிறிதைக் கொடுத்தாலும் சிறப்பாகக் கொடுக்கும் அன்பான கணவராக) இருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஸயீத் பின் ஸலமா  (ரஹ்) வழி அறிவிப்பில், ஆண்மையில்லாதவர்” என்று மட்டும் கூறியதாக இடம் பெற்றுள்ளது; (விவரமில்லாதவர் எனும்) ஐயப்பாடு இடம்பெறவில்லை.

(அபூஸர்உவின் மகள் குறித்து) “அவள் மேலாடை வெறுமையானவள்; (அவளுடைய கணவரின்) மனைவியருள் மேலானவள்; அவளுடைய சக்களத்தியரை மலடியாக்கிவிட்டாள்” என்று காணப்படுகிறது.

(அபூஸர்உவின் பணிப்பெண் குறித்து) “அவள் (உணவுப் பொருட்களை) சேதப்படுத்துவதில்லை” என்பதைக் குறிக்க (“வலா துனக்கிஸு’ என்பதற்குப் பதிலாக) “வலா தன்குஸு மீரத்தனா தன்கீஸா’ என்று காணப்படுகிறது.

“(என் இரண்டாம் கணவர்) இறைச்சிக்காக அறுக்கப்படும் ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார்” என்று உம்மு ஸர்உ கூறியதாக இடம்பெற்றுள்ளது.