حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَبِي مُعَاوِيَةَ كِلَاهُمَا عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي ظِبْيَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِي شَيْبَةَ قَالَ :
بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ فَأَدْرَكْتُ رَجُلًا فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَطَعَنْتُهُ فَوَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ فَذَكَرْتُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَقَتَلْتَهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنْ السِّلَاحِ قَالَ أَفَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لَا فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي أَسْلَمْتُ يَوْمَئِذٍ قَالَ فَقَالَ سَعْدٌ وَأَنَا وَاللَّهِ لَا أَقْتُلُ مُسْلِمًا حَتَّى يَقْتُلَهُ ذُو الْبُطَيْنِ يَعْنِي أُسَامَةَ قَالَ قَالَ رَجُلٌ أَلَمْ يَقُلْ اللَّهُ [وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّه] فَقَالَ سَعْدٌ قَدْ قَاتَلْنَا حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَأَنْتَ وَأَصْحَابُكَ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونُ فِتْنَةٌ
ஒரு போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைப் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்காத் கூட்டத்தரை அடைந்து, ஒரு காலைப் பொழுதில் அவர்களை எதிர் கொண்டோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) நான் ஒருவரை எதிர் கொண்டேன். (அவர் சுற்றி வளைக்கப் பட்டபோது) “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார். (இருப்பினும்) நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று) விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. (போரிலிருந்து திரும்பி வந்த போது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஆயுதத்துக்கு அஞ்சித்தான் அவர் அவ்வாறு சொன்னார்” என்று கூறினேன். “அவர் அதை (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவரது இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள்; நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணுமளவுக்கு அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனவேதான், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எந்த முஸ்லிமுடன் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்த ‘வயிறு சிறுத்த’ உஸாமா போரிடாதவரை நான் போரிட மாட்டேன்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “(முஃமின்களே! இறைமறுப்பாளர்கள் உருவாக்கும்) குழப்பம் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே என்றாகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் …(8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “குழப்பம் முற்றிலும் நீங்கிவிடவேண்டும் என்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டும் என்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)