அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5331

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ أَلاَ وَإِنَّ الْخَمْرَ نَزَلَ تَحْرِيمُهَا يَوْمَ نَزَلَ وَهْىَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالْعَسَلِ ‏.‏ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثَةُ أَشْيَاءَ وَدِدْتُ أَيُّهَا النَّاسُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهَا الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! கவனத்தில் கொள்ளுங்கள்! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது.

  1. தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி),
  2. தொலி நீக்கப்படாத கோதுமை,
  3. பேரீச்சம் பழம்,
  4. உலர்ந்த திராட்சை,
  5. தேன் ஆகியவையே அந்த(ஐந்து)ப் பொருட்கள் ஆகும். (இவையன்றி,) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

  1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரனும் பாட்டனும் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?*
  2. ’கலாலா’ என்றால் என்ன?#
  3. சில வகை வட்டிகள் குறித்த சட்டம்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

*  இறந்துபோனவருக்குத் தந்தையும், தந்தையின் தந்தையான பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் பாட்டனுக்குப் பங்கு கிடைக்காது. இறந்தவரின் தந்தை இறந்து, இறந்தவருக்குப் பிள்ளைகளும் பாட்டனும் உயிருடனிருந்தால் இறந்தவரின் சொத்தில் பாட்டனுக்கு 1/6 பங்கு உண்டு.

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றால், இறந்தவரின் தாய்க்கு 1/3 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

இறந்துபோனவருக்கு உடன்பிறந்த சகோதர்கள் இருந்தால், பெற்ற தாய்க்கு 1/6 பங்கும், மீதி பாட்டனுக்கும் கிடைக்கும்.

# கலாலா : முன்னுரிமை வாரிசுகளான தகப்பனும் பாட்டனும் பின்னுரிமை வாரிசுகளான பிள்ளைகளும் பேரன்களும் இல்லாமல் இறந்துபோனவருடைய சொத்துகள் ‘கலாலா’ எனப்படும். இறந்துபோனவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து, அவரது சொத்து ‘கலாலா’வாக இருப்பின், அதிலிருந்து இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில் இறந்துபோனவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமிருந்தால் ஆளுக்கு 1/6 பங்கு கிடைக்கும். அதிகமான சகோதர-சகோதரிகளிருந்தால், 1/3 பங்கை, சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 4:12).

இறந்துபோனவருக்குப் பிள்ளைகள் இல்லாமல், ஒரு சகோதரி மட்டுமிருந்தால் இறந்தவருடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ளதில், இறந்துபோனவரின் சகோதரிக்கு ½ பங்கு உண்டு.

இறந்துபோனவர் பிள்ளைகளில்லாத பெண்ணாக இருந்து, அவளுடைய கடன்கள் கொடுத்துத் தீர்க்கப்பட்டு, வஸியத் எனும் மரண சாசனம் நிறைவேற்றிய பின்னர் எஞ்சியுள்ள மொத்தச் சொத்துக்கும் இறந்துபோனவளின் சகோதரன் வாரிசாவான் (அல்குர்ஆன் 4:176).

Share this Hadith: