حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سِيَاهٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ :
قَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ يَوْمَ صِفِّينَ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا أَنْفُسَكُمْ لَقَدْ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا وَذَلِكَ فِي الصُّلْحِ الَّذِي كَانَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْمُشْرِكِينَ فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ ” بَلَى ” . قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ ” بَلَى ” . قَالَ فَفِيمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ ” يَا ابْنَ الْخَطَّابِ إِنِّي رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا ” . قَالَ فَانْطَلَقَ عُمَرُ فَلَمْ يَصْبِرْ مُتَغَيِّظًا فَأَتَى أَبَا بَكْرٍ فَقَالَ يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ بَلَى . قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ بَلَى . قَالَ فَعَلاَمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ يَا ابْنَ الْخَطَّابِ إِنَّهُ رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا . قَالَ فَنَزَلَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْفَتْحِ فَأَرْسَلَ إِلَى عُمَرَ فَأَقْرَأَهُ إِيَّاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَفَتْحٌ هُوَ قَالَ ” نَعَمْ ” . فَطَابَتْ نَفْسُهُ وَرَجَعَ
‘ஸிஃப்பீன்’ போர் நாளில் ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) எழுந்து நின்று (மக்களிடையே) கூறினார்கள்:
மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக,) உங்களை நீங்களே குறைபட்டுக்கொள்ளுங்கள்.
நாங்கள் ஹுதைபிய்யா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போரிடுவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போரிட்டு இருப்போம். ஆனால், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது.
(ஹுதைபிய்யாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்!” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்“ என்று விடையளித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி), “அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதனாவேன். என் நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரு அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ரு (ரலி)“ஆம்” என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி), “போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி), “அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ரு (ரலி), “கத்தாபின் மகனே! நபி (ஸல்), அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (“உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்” என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹு’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) மனச் சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள்.
அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) வழியாக அபூவாயில் (ரஹ்)