حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِهَارُونَ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ :
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دَعْهُمَا فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் : “என்னருகில் இரு சிறுமியர் ‘புஆஸ்’ போர் பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) வந்து என்னை அதட்டி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரை ஏறிட்டு நோக்கி, “அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அபூபக்ரு (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் நான் குறிப்பால் உணர்த்தி(வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறி விட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது.
சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டேனோ; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீர விளையாட்டுகளை) விரும்புகிறாயா?” என்று கேட்டார்களோ, நான், “ஆம்“ என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக் கொண்டார்கள். “அர்ஃபிதாவின் (சூடானிய) மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்படைந்தபோது, “போதுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, நான் “ஆம் (போதும்)” என்று சொன்னேன். “அப்படியானால் நீ போகலாம்!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.