அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 23

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَدِمَ ‏ ‏وَفْدُ عَبْدِ الْقَيْسِ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا هَذَا الْحَيَّ مِنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏وَقَدْ ‏ ‏حَالَتْ ‏ ‏بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ ‏ ‏مُضَرَ ‏ ‏فَلَا ‏ ‏نَخْلُصُ ‏ ‏إِلَيْكَ إِلَّا فِي ‏ ‏شَهْرِ الْحَرَامِ ‏ ‏فَمُرْنَا بِأَمْرٍ نَعْمَلُ بِهِ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا قَالَ ‏ ‏آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الْإِيمَانِ بِاللَّهِ ‏ ‏ثُمَّ فَسَّرَهَا لَهُمْ فَقَالَ ‏ ‏شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَأَنْ تُؤَدُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ وَأَنْهَاكُمْ عَنْ ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالنَّقِيرِ ‏ ‏وَالْمُقَيَّرِ ‏
‏زَادَ ‏ ‏خَلَفٌ ‏ ‏فِي رِوَايَتِهِ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَعَقَدَ وَاحِدَةً

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ‘ரபீஆ’ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் (தடையாக) உள்ளனர். அதனால் (போர் புரியத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வரமுடியும். ஆகவே, நாங்கள் கடைப்பிடிப்பதற்கும் எங்களைச் சுற்றி வாழ்பவர்களைக் கடைப்பிடித்து நடக்க அழைப்பு விடுவதற்குமான கட்டளைகளை இடுங்கள்” என்று வேண்டினர்.

நபி (ஸல்) கூறினார்கள்: “நான் கட்டளையிடுபவை நான்கு; தடுப்பவை நான்கு. (கட்டளைகளாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. அதாவது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை(முறையாக)க் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை(அரசுப் பொதுநிதிக்கு)ச் செலுத்துவது.

(தடைகளாவன:) (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரத் தொட்டி; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).


குறிப்பு:

கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை – ஒன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரல் மடக்கிக் கூறியதாக அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 22

و حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عِكْرِمَةَ بْنَ خَالِدٍ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏طَاوُسًا ‏ ‏أَنَّ رَجُلًا قَالَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

‏أَلَا ‏ ‏تَغْزُو فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ الْإِسْلَامَ بُنِيَ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَحَجِّ ‏ ‏الْبَيْتِ

ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அறப்போரில் கலந்து கொள்வதில்லையே (ஏன்)?” என்று கேட்டார். அதற்கு, “இஸ்லாம் என்பது ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“எனக்குப் பதினான்கு வயது ஆகியிருக்கும்போது உஹுதுப் போர் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கோரி, மறுக்கப்பட்டேன். பின்னர் நடந்த அகழ்ப் போரின்போது நான் பதினைந்து வயதைக் கடந்து விட்டிருந்ததால் அனுமதிக்கப்பட்டு அகழ்ப் போரில் நான் கலந்து கொண்டேன்” என்று மேற்காணும் ஹதீஸை அறிவிக்கும் அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமின் 3473ஆவது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 21

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ ‏ ‏الْبَيْتِ ‏ ‏وَصَوْمِ رَمَضَانَ

“இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 20

و حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا سَعْدُ بْنُ طَارِقٍ قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ السُّلَمِيُّ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسٍ عَلَى أَنْ يُعْبَدَ اللَّهُ وَيُكْفَرَ بِمَا دُونَهُ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ

நபி (ஸல்) கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டு, அவன் அல்லாத அனைத்தையும் நிராகரிப்பது; தொழுகையைக் கடைபிடிப்பது; ஸகாத் செலுத்துவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸை எளிதாக விளங்கிக் கொள்வதற்காகத்தான் கடமைகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. பொருள் வளம் நிறைந்த ஒருவர் ஷஃபான் மாதத்தின் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று விட்டால் முதலிரண்டு அடிப்படைக் கடமைகளான ‘ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்’, ‘தொழுகை’ ஆகியவற்றோடு அடுத்து வரும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது மூன்றாவது அடிப்படைக் கடமையாக அவருக்கு அமையும். அவரே சற்றுத் தாமதமாக (ரமளான் கழிந்து) ஷவ்வால் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினால் அடுத்த இரண்டு மாதங்களில் வரும் ‘ஹஜ்’ அவருக்கு மூன்றாவது கடமையாக அமைந்து, நான்காவதாக அடுத்த ஹிஜ்ரீ ஆண்டின் நோன்பும் ஐந்தாவதாக (ஷவ்வால் மாதத்தில்) ஸகாத்தும் ஐந்தாவது கடமைகளாக மாறி விடும்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 19

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الأحْمَرَ عَنْ أَبِي مَالِكٍ الأشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ لا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை:

ஏக இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது.

தொழுகையைக் கடைப்பிடிப்பது.

ஸகாத் செலுத்துவது.

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

ஹஜ் செய்வது என்று நபி(ஸல்) கூறினார்கள்”.

எனக் குறிப்பிட்டபோது “ஹஜ்ஜும் நோன்பும் (அடுத்தடுத்தா)?” என்று ஒருவர் வினவினார். “இல்லை; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, ஹஜ் செய்வது என்ற(வரிசை)வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்”

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 18

و حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ حَدَّثَنَا مَعْقِلٌ وَهُوَ ابْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ :‏

أَنَّ رَجُلا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ وَصُمْتُ رَمَضَانَ وَأَحْلَلْتُ الْحَلالَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا أَأَدْخُلُ الْجَنَّةَ قَالَ نَعَمْ قَالَ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى ذَلِكَ شَيْئًا

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “கடமையானத் தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டு, விலக்கப் பட்டவற்றை விலக்கி வாழ்ந்து, இவற்றில் வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்து விடுவேனா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்), “ஆம்” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவற்றில் வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : ஜாபின் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 17

و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ قَالا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ الأعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ النُّعْمَانُ بْنُ قَوْقَلٍ يَا رَسُولَ اللَّهِ بِمِثْلِهِ وَزَادَا فِيهِ وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا

மேற்கண்ட (16ஆவது) ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி), “இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்” என்று கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 16

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَاللَّفْظُ لأبِي كُرَيْبٍ قَالا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الأعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ :‏

أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النُّعْمَانُ بْنُ قَوْقَلٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الْمَكْتُوبَةَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَأَحْلَلْتُ الْحَلالَ أَأَدْخُلُ الْجَنَّةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ

நுஅமான் பின் கவ்கல் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையானத் தொழுகையை நிறைவேற்றி (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கியும் அனுமதிக்கப்பட்டவற்றை ஏற்றும் வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபின் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 15

و حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ قَالَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُ رَمَضَانَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لا أَزِيدُ عَلَى هَذَا شَيْئًا أَبَدًا وَلا أَنْقُصُ مِنْهُ فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல்படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்று வேண்டினார். நபி (ஸல்),  “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், “என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்” என்று கூறினார்.

அவர் சென்றதும் நபி (ஸல்), “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 14

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ أَخْبَرَنَا أَبُو الأحْوَصِ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأحْوَصِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنْ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رَحِمِكَ فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ


وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ إِنْ تَمَسَّكَ بِهِ

ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருக்குக் கட்டளையிடப பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்றுவிடுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “இதை அவர் கடைப்பிடித்தால் …” என்று இடம் பெற்றுள்ளது.