அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5070

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَىِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلاَءِ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ ‏”‏

“பனூ கஅப் குலத்தாரின் தந்தையான அம்ரு பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப், தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அம்ரு என்பாருக்குச் சுருக்கமான இன்னொரு பெயர் ‘குஸாஆ‘ என்பதாகும். இவர்தாம் ‘ஹுபல்‘ எனும் சிலையை ஷாமிலிருந்து கொண்டுவந்து மக்காவில் நிறுவி, சிலை வணக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்தவர் என்று ‘தக்மிலா‘வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5069

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ قَالَ :‏

خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ النَّاقَةَ وَذَكَرَ الَّذِي عَقَرَهَا فَقَالَ ‏”‏ إِذِ انْبَعَثَ أَشْقَاهَا انْبَعَثَ بِهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ مَنِيعٌ فِي رَهْطِهِ مِثْلُ أَبِي زَمْعَةَ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَ فِيهِنَّ ثُمَّ قَالَ ‏”‏ إِلاَمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ‏”‏ ‏.‏ فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ ‏”‏ جَلْدَ الأَمَةِ ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ ‏”‏ جَلْدَ الْعَبْدِ وَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ ‏”‏ ‏.‏ ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ فَقَالَ ‏”‏ إِلاَمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான் …” எனும் (91:12) இறைவசனத்தைக் கூறிவிட்டு, “அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்” என்று சொன்னார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு “உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகின்றார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன்தான் படுக்க நேரிடும். (இது முறையா?)” என்று கூறினார்கள்.

பிறகு, (பின் துவார வழியாகக்) காற்றுப் பிரிந்தால் மக்கள் சிரிப்பது குறித்து, “உங்களில் ஒருவருக்கு நிகழும் (இயல்பான) செயல், பிறருக்கு நிகழும்போது (கேலியாகச்) சிரிக்கலாமா?” என்று கேட்டு உபதேசித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)


குறிப்புகள் :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று …” எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமையை அடிப்பதைப் போன்று …” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5068

حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏‏

“பரட்டைத் தலையுடன், வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை உண்மையாக்குவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5067

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ جَوَّاظٍ زَنِيمٍ مُتَكَبِّرٍ ‏”‏

“சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; ஒரு வமிசத்தில் பிறந்ததாகப் பொய்யாக வாதிடுபவர்கள்; பெருமை அடிப்பவர்கள்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5066

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ صلى الله عليه وسلم ‏”‏ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ ‏”‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏”‏ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ‏”‏ ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ أَلاَ أَدُلُّكُمْ ‏”‏

நபி (ஸல்), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?“ என்று (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்), “(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான்” என்று கூறியதையும்,

பிறகு “நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். “அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்” என்று நபியவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?“ என்பதற்குப் பகரமாக “உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5065

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ قَالَ :‏

‏”‏ مَا بَيْنَ مَنْكِبَىِ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ ‏”‏


وَلَمْ يَذْكُرِ الْوَكِيعِيُّ ‏”‏ فِي النَّارِ ‏”‏

“நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம்,  வாகனத்தில் விரைந்து பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாக இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஹ்மது பின் உமர் அல்வகீயீ (ரஹ்) வழி அறிவிப்பில், ஹதீஸின் தொடக்கத்திலுள்ள “நரகத்தில்” எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5064

حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ هَارُونَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ ضِرْسُ الْكَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلاَثٍ ‏”‏

“(நரகத்தில்) இறைமறுப்பாளனின் கடைவாய்ப் பல் / கோரைப் பல் உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5063

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ وَصَارَ أَهْلُ النَّارِ إِلَى النَّارِ أُتِيَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ ثُمَّ يُذْبَحُ ثُمَّ يُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ ‏.‏ فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ ‏”‏

“சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு, மரணம் (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என்று அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குத் துக்கத்துக்கு மேல் துக்கம் அதிகமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5062

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ قَالَ :‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ يُدْخِلُ اللَّهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ ثُمَّ يَقُومُ مُؤَذِّنٌ بَيْنَهُمْ فَيَقُولُ يَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ كُلٌّ خَالِدٌ فِيمَا هُوَ فِيهِ ‏”‏

“அல்லாஹ், சொர்க்கவாசிகளை சொர்க்கத்திற்கும் நரகவாசிகளை நரகத்திற்கும் அனுப்பிய பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே நின்று, ‘சொர்க்கவாசிகளே! இனி மரணம் இல்லை. நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. (உங்களில்) ஒவ்வொருவரும் அவரவர் இருக்குமிடத்தில் நிரந்தரமாக இருப்பீர்கள்‘ என்று அறிவிப்பார்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5061

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يُجَاءُ بِالْمَوْتِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ كَبْشٌ أَمْلَحُ – زَادَ أَبُو كُرَيْبٍ – فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ – وَاتَّفَقَا فِي بَاقِي الْحَدِيثِ – فَيُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ – قَالَ – وَيُقَالُ يَا أَهْلَ النَّارِ هَلْ تَعْرِفُونَ هَذَا قَالَ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ – قَالَ – فَيُؤْمَرُ بِهِ فَيُذْبَحُ – قَالَ – ثُمَّ يُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏{‏ وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لاَ يُؤْمِنُونَ‏}‏ وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِذَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏.‏ وَلَمْ يَقُلْ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَيْضًا وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا

“மறுமை நாளில், உப்பு (வெள்ளை) நிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். பிறகு, ‘சொர்க்கவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?‘ என்று கேட்கப்படும். அப்போது சொர்க்கவாசிகள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, ‘ஆம்; (தெரியும்) இதுதான் மரணம்‘ என்று பதிலளிப்பார்கள்.

பிறகு (நரகவாசிகளை நோக்கி), ‘நரகவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?‘ என்று கேட்கப்படும். அவர்களும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, ‘ஆம் (தெரியும்). இதுதான் மரணம்‘ என்று பதில் சொல்வார்கள்.

உடனே (இறைவனின்) கட்டளைக்கேற்ப அந்த (ஆட்டின் உருவத்திலுள்ள) மரணம் அறுக்கப்பட்டுவிடும். பிறகு ‘நிரந்தர சொர்க்கவாசிகளே! இனி (உங்களுக்கு) மரணமே இல்லை; நிரந்தர நரகவாசிகளே! இனி (உங்களுக்கு) மரணம் என்பதே இல்லை‘ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்புகள் :

“இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்தக் கைசேதத்துக்குரிய நாளைப் பற்றி, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும் நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்’ எனும் (19:39) இறைவசனத்தை ஓதிக்காட்டியவாறு தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்“ என்று இதன் அறிவிப்பாளர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) கூறுகின்றார்கள்.

“… மரணம் கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே நிறுத்தப்படும் …” என அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ … சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பின் ‘சொர்க்கவாசிகளே!’ என அழைக்கப்படும் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், “இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் 19:39ஆவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்” என இடம்பெற்றுள்ளது.

“… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அந்த 19:39 ஆவது வசனத்தை) ஓதிக்காட்டினார்கள்” என்பதோ “தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்” என்பதோ இடம்பெறவில்லை.