அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3667

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، – يَعْنِي الْحَنَفِيَّ – حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ :‏

لَقَدْ أَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي حَرَّمَ اللَّهُ فِيهَا الْخَمْرَ وَمَا بِالْمَدِينَةِ شَرَابٌ يُشْرَبُ إِلاَّ مِنْ تَمْرٍ

அல்லாஹ் மதுவைத் தடை செய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3666

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ :‏

كُنْتُ أَسْقِي أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَأَبَا طَلْحَةَ وَأُبَىَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ وَتَمْرٍ فَأَتَاهُمْ آتٍ فَقَالَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ ‏.‏ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أَنَسُ قُمْ إِلَى هَذِهِ الْجَرَّةِ فَاكْسِرْهَا ‏.‏ فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى تَكَسَّرَتْ ‏‏

அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுபானத்தை நான் பரிமாறிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து “மது தடை செய்யப்பட்டு விட்டது!” என்று கூறினார்.

உடனே அபூதல்ஹா (ரலி), “அனஸே! எழுந்து இந்தக் கலயங்களை உடைத்துவிடு!” என்று கூறினார்கள். அவ்வாறே நான் எங்களது கலயம் ஒன்றை நோக்கி எழுந்து, அதன் அடிப் பாகத்தில் அடித்தேன். அது உடைந்துவிட்டது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3665

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ قَتَادَةَ بْنَ دِعَامَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ :‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُخْلَطَ التَّمْرُ وَالزَّهْوُ ثُمَّ يُشْرَبَ وَإِنَّ ذَلِكَ كَانَ عَامَّةَ خُمُورِهِمْ يَوْمَ حُرِّمَتِ الْخَمْرُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கனிந்த பேரீச்சம் பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய செங்காயையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் பின்னர் அதை அருந்த வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். மது தடை செய்யப்பட்ட நாளில் அவர்களுடைய பொதுவான மதுபானம் அதுவாகவே இருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3664

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ فِي رَهْطٍ مِنَ الأَنْصَارِ فَدَخَلَ عَلَيْنَا دَاخِلٌ فَقَالَ حَدَثَ خَبَرٌ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ ‏.‏ فَكَفَأْنَاهَا يَوْمَئِذٍ وَإِنَّهَا لَخَلِيطُ الْبُسْرِ وَالتَّمْرِ ‏.‏ قَالَ قَتَادَةُ وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ لَقَدْ حُرِّمَتِ الْخَمْرُ وَكَانَتْ عَامَّةُ خُمُورِهِمْ يَوْمَئِذٍ خَلِيطَ الْبُسْرِ وَالتَّمْرِ ‏


وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالُوا أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ إِنِّي لأَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَسُهَيْلَ ابْنَ بَيْضَاءَ مِنْ مَزَادَةٍ فِيهَا خَلِيطُ بُسْرٍ وَتَمْرٍ ‏.‏ بِنَحْوِ حَدِيثِ سَعِيدٍ ‏.‏

நான் அன்ஸாரிகளில் ஒரு குழுவில் அபூதல்ஹா (ரலி), அபூதுஜானா (ரலி), மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோருக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் உள்ளே வந்து, “புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது. மதுவைத் தடை செய்யும் இறை வசனம் அருளப்பெற்றுள்ளது!” என்று கூறினார்.

அன்றைய தினத்தில் நாங்கள் மதுக் கலயங்களைக் கவிழ்த்துவிட்டோம். அ(ப்போதைய ம)து, நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

அறிவிப்பாளர் : ‏அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

“மது தடை செய்யப்பட்டபோது மக்களின் மதுபானங்களில் பெரும்பாலனவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரித்தவையாகவே இருந்தன” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) கூறியுள்ளார்.

முஆத் பின் ஹிஷாம் (ரஹ்), தம் தந்தை வழி அறிவிப்பு,  “நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழத்திலிருந்தும் கலந்து தயாரித்த மது பானத்தை அபூதல்ஹா (ரலி), அபூ துஜானா (ரலி) மற்றும் சுஹைல் பின் பைளா (ரலி) ஆகியோருக்கு நான் தோல் பையிலிருந்து  பரிமாறிக்கொண்டிருந்தேன்” என்று அனஸ் (ரலி) கூறியதாக ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3663

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

إِنِّي لَقَائِمٌ عَلَى الْحَىِّ عَلَى عُمُومَتِي أَسْقِيهِمْ مِنْ فَضِيخٍ لَهُمْ وَأَنَا أَصْغَرُهُمْ سِنًّا فَجَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّهَا قَدْ حُرِّمَتِ الْخَمْرُ فَقَالُوا اكْفَأْهَا يَا أَنَسُ ‏.‏ فَكَفَأْتُهَا ‏.‏ قَالَ قُلْتُ لأَنَسٍ مَا هُوَ قَالَ بُسْرٌ وَرُطَبٌ ‏.‏ قَالَ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ ‏.‏ قَالَ سُلَيْمَانُ وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ ذَلِكَ أَيْضًا ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ أَنَسٌ كُنْتُ قَائِمًا عَلَى الْحَىِّ أَسْقِيهِمْ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ ‏.‏ وَأَنَسٌ شَاهِدٌ فَلَمْ يُنْكِرْ أَنَسٌ ذَاكَ ‏.‏ وَقَالَ ابْنُ عَبْدِ الأَعْلَى حَدَّثَنَا الْمُعْتَمِرُ عَنْ أَبِيهِ قَالَ حَدَّثَنِي بَعْضُ مَنْ كَانَ مَعِي أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ‏.‏

நான் எங்கள் உறவினரிடையே என் தந்தையின் சகோதரர்களுக்கு, அவர்களுக்குரிய பேரீச்சங்காய் மதுவை நின்றுகொண்டு பரிமாறிக்கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ஒருவர் வந்து, “மது தடை செய்யப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார். உடனே என் தந்தையின் சகோதரர்கள், “அனஸே! இவற்றைக் கவிழ்த்துவிடு” என்று கூறினார்கள். அவ்வாறே நான் (மதுக் கலயங்களைக்) கவிழ்த்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அ(வர்களுடைய ம)து எ(த்தகைய)து?” என்று கேட்டேன். அதற்கு, “நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் செங்காய்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது அபூபக்ரு பின் அனஸ் (ரஹ்), “அக்காலத்தில் அதுதான் அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று (விளக்கிக்) கூறினார் என்று இதன் அறிவிப்பாளரான ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

“இவ்வாறு அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாக மற்றொருவர் எனக்கு அறிவித்தார்” என்றும் ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

அல் முஃதமர் பின் ஸுலைமான் (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பது, “நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்…” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

மேலும், அதில், அப்போது அபூபக்ரு பின் அனஸ் (ரஹ்), “அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ரு அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) மறுக்கவில்லை.

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3662

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَأَلُوا أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْفَضِيخِ، فَقَالَ :‏

مَا كَانَتْ لَنَا خَمْرٌ غَيْرَ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الْفَضِيخَ إِنِّي لَقَائِمٌ أَسْقِيهَا أَبَا طَلْحَةَ وَأَبَا أَيُّوبَ وَرِجَالاً مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِنَا إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ هَلْ بَلَغَكُمُ الْخَبَرُ قُلْنَا لاَ قَالَ فَإِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ فَقَالَ يَا أَنَسُ أَرِقْ هَذِهِ الْقِلاَلَ قَالَ فَمَا رَاجَعُوهَا وَلاَ سَأَلُوا عَنْهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ‏.‏

மக்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பேரீச்சங்காய் மது(வான ஃபளீக்) குறித்துக் கேட்டனர். அப்போது அனஸ் (ரலி) கூறினார்கள்: நீங்கள் ‘ஃபளீக்’ எனக் குறிப்பிடும் இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி (ஸல்) காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை.

நான் எங்கள் வீட்டில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் வேறுசிலருக்கும் மது பரிமாறுவதில் (ஒரு நாள்) ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து, “உங்களுக்குச் செய்தி (ஏதும்) எட்டியதா?“ என்று கேட்டார். நாங்கள் “இல்லை“ என்றோம். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது!” என்று தெரிவித்தார்.

அப்போது அபூதல்ஹா (ரலி), “அனஸே! இந்த மதுப் பீப்பாயைக் கீழே கொட்டி விடு“ என்று கூறினார்கள். அவர் (தடை) செய்தியைத் தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவைத் திரும்பிப் பார்க்கவில்லை. (உறுதி செய்துகொள்வதற்காக) மதுவைப் பற்றி (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3661

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتِ الْخَمْرُ فِي بَيْتِ أَبِي طَلْحَةَ وَمَا شَرَابُهُمْ إِلاَّ الْفَضِيخُ الْبُسْرُ وَالتَّمْرُ ‏.‏ فَإِذَا مُنَادٍ يُنَادِي فَقَالَ اخْرُجْ فَانْظُرْ فَخَرَجْتُ فَإِذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ – قَالَ – فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَاهْرِقْهَا ‏.‏ فَهَرَقْتُهَا فَقَالُوا أَوْ قَالَ بَعْضُهُمْ قُتِلَ فُلاَنٌ قُتِلَ فُلاَنٌ وَهِيَ فِي بُطُونِهِمْ  – قَالَ فَلاَ أَدْرِي هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ – فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ‏}‏

மது தடை செய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய செம்பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே அவர்கள் அருந்துபவர்களாக இருந்தனர்.

ஒரு பொது அறிவிப்பாளர்,  (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்), “மது தடை செய்யப்பட்டுவிட்டது (மக்களே!)” என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) (என்னிடம்), “வெளியே போய் பார்(த்து வா)” என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர், “அறிந்துகொள்ளுங்கள். மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.

(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) என்னிடம், “வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு” என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்துக்) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.

அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) “மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்னவர் கொல்லப்பட்டார்; இன்னவர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)” என்று கூறினர்.

(இந்த வாசகம் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை என அறிவிப்பாளர்களுள் ஒருவர் கூறுகின்றார்).

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து, (பாவங்களிலிருந்து) தற்காத்துக் கொண்டு, மேலும் நம்பிக்கை கொண்டு, மென்மேலும் நற்செயல்கள் செய்து வருவார்களானால் … (தற்போது) தடுக்கப்பட்டவற்றைக் கடந்த காலத்தில் புசித்து/ருசித்துவிட்டவை குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான் ” எனும் (5:93) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3660

وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ أَبُو عُثْمَانَ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ عَلِيٍّ أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ، أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا قَالَ :‏

كَانَتْ لِي شَارِفٌ مِنْ نَصِيبِي مِنَ الْمَغْنَمِ يَوْمَ بَدْرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَانِي شَارِفًا مِنَ الْخُمُسِ يَوْمَئِذٍ فَلَمَّا أَرَدْتُ أَنْ أَبْتَنِيَ بِفَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاعَدْتُ رَجُلاً صَوَّاغًا مِنْ بَنِي قَيْنُقَاعَ يَرْتَحِلُ مَعِيَ فَنَأْتِي بِإِذْخِرٍ أَرَدْتُ أَنْ أَبِيعَهُ مِنَ الصَّوَّاغِينَ فَأَسْتَعِينَ بِهِ فِي وَلِيمَةِ عُرْسِي فَبَيْنَا أَنَا أَجْمَعُ لِشَارِفَىَّ مَتَاعًا مِنَ الأَقْتَابِ وَالْغَرَائِرِ وَالْحِبَالِ وَشَارِفَاىَ مُنَاخَانِ إِلَى جَنْبِ حُجْرَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَجَمَعْتُ حِينَ جَمَعْتُ مَا جَمَعْتُ فَإِذَا شَارِفَاىَ قَدِ اجْتُبَّتْ أَسْنِمَتُهُمَا وَبُقِرَتْ خَوَاصِرُهُمَا وَأُخِذَ مِنْ أَكْبَادِهِمَا فَلَمْ أَمْلِكْ عَيْنَىَّ حِينَ رَأَيْتُ ذَلِكَ الْمَنْظَرَ مِنْهُمَا قُلْتُ مَنْ فَعَلَ هَذَا قَالُوا فَعَلَهُ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ وَهُوَ فِي هَذَا الْبَيْتِ فِي شَرْبٍ مِنَ الأَنْصَارِ غَنَّتْهُ قَيْنَةٌ وَأَصْحَابَهُ فَقَالَتْ فِي غِنَائِهَا أَلاَ يَا حَمْزَ لِلشُّرُفِ النِّوَاءِ فَقَامَ حَمْزَةُ بِالسَّيْفِ فَاجْتَبَّ أَسْنِمَتَهُمَا وَبَقَرَ خَوَاصِرَهُمَا فَأَخَذَ مِنْ أَكْبَادِهِمَا قَالَ عَلِيٌّ فَانْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ – قَالَ  – فَعَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَجْهِيَ الَّذِي لَقِيتُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَا لَكَ ‏”‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا رَأَيْتُ كَالْيَوْمِ قَطُّ عَدَا حَمْزَةُ عَلَى نَاقَتَىَّ فَاجْتَبَّ أَسْنِمَتَهُمَا وَبَقَرَ خَوَاصِرَهُمَا وَهَا هُوَ ذَا فِي بَيْتٍ مَعَهُ شَرْبٌ – قَالَ – فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرِدَائِهِ فَارْتَدَاهُ ثُمَّ انْطَلَقَ يَمْشِي وَاتَّبَعْتُهُ أَنَا وَزَيْدُ بْنُ حَارِثَةَ حَتَّى جَاءَ الْبَابَ الَّذِي فِيهِ حَمْزَةُ فَاسْتَأْذَنَ فَأَذِنُوا لَهُ فَإِذَا هُمْ شَرْبٌ فَطَفِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَلُومُ حَمْزَةَ فِيمَا فَعَلَ فَإِذَا حَمْزَةُ مُحْمَرَّةٌ عَيْنَاهُ فَنَظَرَ حَمْزَةُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَعَّدَ النَّظَرَ إِلَى رُكْبَتَيْهِ ثُمَّ صَعَّدَ النَّظَرَ فَنَظَرَ إِلَى سُرَّتِهِ ثُمَّ صَعَّدَ النَّظَرَ فَنَظَرَ إِلَى وَجْهِهِ فَقَالَ حَمْزَةُ وَهَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لأَبِي فَعَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ثَمِلٌ فَنَكَصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عَقِبَيْهِ الْقَهْقَرَى وَخَرَجَ وَخَرَجْنَا مَعَهُ ‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

பத்ருப் போர்ச் செல்வத்திலிருந்து எனது பங்காக, வயதான ஓர் ஒட்டகம் எனக்குக் கிடைத்திருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அன்றைய தினத்தில் (அவர்களுக்குரிய) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து வயதான மற்றோர் ஒட்டகத்தை எனக்கு வழங்கியிருந்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா(வை மணந்து) அவர்களுடன் இல்லற உறவைத் தொடங்க விரும்பியபோது, ‘பனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், ‘இத்கிர்’ புல்லைச் சேகரிக்க என்னுடன் (துணைக்கு) வரவேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பிற பொற்கொல்லர்களுக்கு விற்று, அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். அதற்காக நான் என் ஒட்டகங்களுக்கான சேணங்களையும் தீவனப் பைகளையும் கயிறுகளையும் சேகரிக்கப் போனேன். என் இரு ஒட்டகங்களும் அன்ஸாரி ஒருவரது வீட்டின் அறையின் அருகே படுக்கவைக்கப்பட்டிருந்தன.

நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்து (முடித்துத் திரும்பி) வந்து பார்த்தபோது என் இரு ஒட்டகங்களின் திமில்களும் பிளக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடுப்புப் பகுதியும் பிளக்கப்பட்டு, அதன் ஈரல்குலைகள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் அந்த (கோரக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களை (அழாமல்) அடக்கமுடியவில்லை.

நான், “இதைச் செய்தவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தாம் இப்படிச் செய்துவிட்டார். அவர் அந்த வீட்டில் அன்ஸாரிகளின் மது அருந்தும் குழுவினருடன் அவருடைய நண்பர்களோடு இருக்கின்றார். அடிமைப் பாடகி ஒருத்தியும் (பாடிக்கொண்டு) இருந்தாள். அவள் தனது பாடலில், ‘ஹம்ஸா! இந்தக் கிழ ஒட்டகங்களுக்கு, உம் ஒரு கையே போதுமானது’ என்று பாடினாள். உடனே வாளுடன் எழுந்த ஹம்ஸா, அவ்விரு ஒட்டகங்களின் திமில்களைப் பிளந்தார். அதன் இடுப்புப் பகுதியைப் பிளந்து, அவற்றின் ஈரல்குலைகளை வெளியே எடுத்துவிட்டார்” என்று பதிலளித்தனர்.

உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். எனது (துயர) முகத்தைப் பார்த்து, நான் (ஏதோவொரு) துன்பத்தோடு வந்திருப்பதை அறிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (கண்டதைப்) போன்று (ஓர் அவலத்தை) நான் ஒருபோதும் கண்டதில்லை. ஹம்ஸா என் ஒட்டகங்களிடம் எல்லை மீறிவிட்டார். அவற்றின் திமில்களை வெட்டித் துண்டாடிவிட்டார். அவற்றின் இடுப்பைப் பிளந்து விட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் குழுவினருடன் இருக்கின்றார்” என்று சொன்னேன்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது மேலங்கியைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்தார்கள். அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர்ந்தோம். ஹம்ஸா இருந்த (வீட்டு) வாசல் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அனுமதி கிடைத்தது. அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹம்ஸாவை, அவர் செய்த அடாத செயலுக்காகக் கண்டிக்கலானார்கள்.

அப்போது ஹம்ஸாவின் கண்கள் சிவந்திருந்தன. ஹம்ஸா (தலையை உயர்த்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு தமது பார்வையைத் தாழ்த்தி அவர்களின் இரு முழங்கால் பகுதிகளைப் பார்த்தார். பிறகு மீண்டும் பார்வையை உயர்த்தி வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு இன்னும் சற்று தலையை உயர்த்தி முகத்தைப் பார்த்தார். பிறகு, “நீங்களெல்லாம் என் தந்தையின் அடிமைகள்தாமே?” என்று கேட்டார்.

அவர் போதையில் இருக்கிறார் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் எட்டுவைத்து, வந்த வழியே வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3659

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، حُسَيْنِ بْنِ عَلِيٍّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ :‏

أَصَبْتُ شَارِفًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَغْنَمٍ يَوْمَ بَدْرٍ وَأَعْطَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَارِفًا أُخْرَى فَأَنَخْتُهُمَا يَوْمًا عِنْدَ بَابِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَأَنَا أُرِيدُ أَنْ أَحْمِلَ عَلَيْهِمَا إِذْخِرًا لأَبِيعَهُ وَمَعِيَ صَائِغٌ مِنْ بَنِي قَيْنُقَاعَ فَأَسْتَعِينَ بِهِ عَلَى وَلِيمَةِ فَاطِمَةَ وَحَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ يَشْرَبُ فِي ذَلِكَ الْبَيْتِ مَعَهُ قَيْنَةٌ تُغَنِّيهِ فَقَالَتْ أَلاَ يَا حَمْزَ لِلشُّرُفِ النِّوَاءِ فَثَارَ إِلَيْهِمَا حَمْزَةُ بِالسَّيْفِ فَجَبَّ أَسْنِمَتَهُمَا وَبَقَرَ خَوَاصِرَهُمَا ثُمَّ أَخَذَ مِنْ أَكْبَادِهِمَا ‏.‏ قُلْتُ لاِبْنِ شِهَابٍ وَمِنَ السَّنَامِ؟ قَالَ قَدْ جَبَّ أَسْنِمَتَهُمَا فَذَهَبَ بِهَا. ‏‏ قَالَ ابْنُ شِهَابٍ : قَالَ عَلِيٌّ فَنَظَرْتُ إِلَى مَنْظَرٍ أَفْظَعَنِي فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ فَأَخْبَرْتُهُ الْخَبَرَ فَخَرَجَ وَمَعَهُ زَيْدٌ وَانْطَلَقْتُ مَعَهُ فَدَخَلَ عَلَى حَمْزَةَ فَتَغَيَّظَ عَلَيْهِ فَرَفَعَ حَمْزَةُ بَصَرَهُ فَقَالَ هَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لآبَائِي فَرَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَهْقِرُ حَتَّى خَرَجَ عَنْهُمْ ‏.‏


وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

பத்ருப் போரில் கிடைத்த செல்வங்களில் (எனது பங்காக) வயதான ஒட்டகம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பெற்றிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது பொறுப்பில் வந்த ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்கு வழங்கினார்கள்.

ஒரு நாள் நான் அவ்விரண்டு ஒட்டகங்களையும் அன்ஸாரி ஒருவரின் வீட்டு வாசலருகே படுக்கவைத்திருந்தேன். ‘இத்கிர்’ எனும் புல்லை அவற்றின் மீது ஏற்றிச் சென்று விற்கவேண்டுமென நான் நினைத்திருந்தேன். அப்போது ‘பனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் என்னுடன் (உதவியாக வர) இருந்தார். ஃபாத்திமா(வை மணம் புரிந்த) ‘வலீமா’ விருந்துக்காக அந்தப் புல் விற்கும் பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன்.

அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், “ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழ ஒட்டகங்களுக்கு நீர் ஒருவரே போதும். (எழுவீராக!)” என்று பாடினாள்.

உடனே ஹம்ஸா (ரலி) வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; அவற்றின் இடுப்பைப் பிளந்து, பின்னர் ஈரல்குலைகளை வெளியே எடுத்தார்.

என்னை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காட்சியைக் கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்  நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெளிப்படுத்தினார்கள்.

அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, “நீங்களெல்லாம் என் மூதாதையரின் அடிமைகள்தாமே?” என்று வினவினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்துவந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகின்றார்: நான் எனக்கு இதை அறிவித்த இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் “திமில்களையுமா அவர் வெளியே எடுத்தார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்; அவற்றின் திமில்களையும் பிளந்து எடுத்தார்” என்று கூறினார்கள்.