அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 248

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَاضِعًا يَدَيْهِ عَلَى رَجُلَيْنِ ‏ ‏يَسْكُبُ ‏ ‏رَأْسُهُ أَوْ يَقْطُرُ رَأْسُهُ فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏عِيسَى ابْنُ مَرْيَمَ ‏ ‏أَوْ ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏لَا نَدْرِي أَيَّ ذَلِكَ قَالَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا أَحْمَرَ ‏ ‏جَعْدَ ‏ ‏الرَّأْسِ أَعْوَرَ الْعَيْنِ الْيُمْنَى أَشْبَهُ مَنْ رَأَيْتُ بِهِ ‏ ‏ابْنُ قَطَنٍ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“இறையில்லம் கஅபாவின் அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடியுடைய ஒருவரைக் (கனவில்) கண்டேன். அவர், இருவர் (தோள்கள்) மீது தம் இரு கைகளை வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து – அல்லது – சொட்டிக் கொண்டிருந்தது. நான், இவர் யார் என்று கேட்டேன். அதற்கு, மர்யமின் மகன் ஈஸா – அல்லது – மர்யமின் மகன் மஸீஹ் என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் சிவப்பு நிறமுடைய, பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனை நான் பார்த்தேன். நான் பார்த்தவர்களுள் இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். இவன் யார்? என்று கேட்டேன். இவன் மஸீஹ் தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

மர்யமின் மகன் ஈஸா – அல்லது – மர்யமின் மகன் மஸீஹ் ஆகிய இரண்டும் ஈஸா (அலை) அவர்களையே குறிக்கும் என்றாலும் அவ்விரண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள் என்பதில் அறிவிப்பாளருக்கு ஐயம் இருந்துள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 247

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى وَهُوَ ابْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ :‏ ‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بَيْنَ ظَهْرَانَيْ النَّاسِ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيْسَ بِأَعْوَرَ أَلَا إِنَّ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا ‏ ‏تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ ‏ ‏بِابْنِ قَطَنٍ ‏ ‏وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருநாள் மக்களிடையே மஸீஹு தஜ்ஜாலை  நினனவுகூர்ந்தபோது, “அல்லாஹ், ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் மஸீஹ் வலக்கண் குருடன். அவனுடைய கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“இரவின் கனவில் கஅபாவின் அருகே என்னை நான் கண்டேன். நீ கண்ட மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது. இருவரது தோள்கள் மீது, அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். இவர் யார்? என்று நான் கேட்டேன். மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனைக் கண்டேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். அவனும் இருவரது தோள்கள் மீது தன் கரங்களை வைத்துக் கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தான். இவன் யார்? என்று நான் கேட்டேன். இவன் மஸீஹு தஜ்ஜால் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 246


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَرَانِي لَيْلَةً عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَرَأَيْتُ رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ لَهُ ‏ ‏لِمَّةٌ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ اللِّمَمِ قَدْ ‏ ‏رَجَّلَهَا ‏ ‏فَهِيَ تَقْطُرُ مَاءً مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ أَوْ عَلَى ‏ ‏عَوَاتِقِ ‏ ‏رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ ‏ ‏جَعْدٍ ‏ ‏قَطَطٍ ‏ ‏أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“ஓர் இரவில் நான் (இறையில்லம்) கஅபாவின் அருகே (இருப்பதைப் போல் கனவில்) என்னைக் கண்டேன். அப்போது மாநிறம் கொண்ட மனிதர்களுள் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட தலைமுடிகளில் நீ பார்த்தவற்றுள் மிக அழகான தலைமுடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி – அல்லது – இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளிக்கப்பட்டது. அங்குப் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனுமிருந்தான். அவனுக்கிருந்த கண் (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். இவன்தான் மஸீஹுத் தஜ்ஜால் என்று பதிலளிக்கப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 245

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِي ‏ ‏لَقِيتُ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَنَعَتَهُ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَجُلٌ حَسِبْتُهُ قَالَ مُضْطَرِبٌ ‏ ‏رَجِلُ الرَّأْسِ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ قَالَ وَلَقِيتُ ‏ ‏عِيسَى ‏ ‏فَنَعَتَهُ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا ‏ ‏رَبْعَةٌ ‏ ‏أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ ‏ ‏دِيمَاسٍ ‏ ‏يَعْنِي حَمَّامًا قَالَ ‏ ‏وَرَأَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ فَأُتِيتُ بِإِنَاءَيْنِ فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقَالَ هُدِيتَ الْفِطْرَةَ ‏ ‏أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ ‏ ‏أَمَّا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ ‏ ‏غَوَتْ ‏ ‏أُمَّتُكَ

நபி (ஸல்), (விண்ணுலக) இரவுப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்தவற்றை விவரித்து, “நான் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறி அவர்களை வர்ணித்தபோது, “மூஸா (அலை) ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று ஒல்லியாக, தொங்கும் தலைமுடியோடு காணப்பட்டார்கள்”.

“நான் ஈஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்களை வர்ணித்தபோது, “சிவந்த நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடைய வழித்தோன்றல்களிலேயே சாயலில் அவர்களை ஒத்திருப்பவன் நானே. (அந்தப் பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்துப் பருகினேன். அப்போது, நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள் அல்லது நீங்கள் இயற்கை மரபை பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 244

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عُرِضَ عَلَيَّ الْأَنْبِيَاءُ فَإِذَا ‏ ‏مُوسَى ‏ ‏ضَرْبٌ مِنْ الرِّجَالِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ ‏ ‏عِيسَى ابْنَ مَرْيَمَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا ‏ ‏عُرْوَةُ بْنُ مَسْعُودٍ ‏ ‏وَرَأَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا صَاحِبُكُمْ ‏ ‏يَعْنِي نَفْسَهُ وَرَأَيْتُ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا ‏ ‏دَحْيَةُ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ رُمْحٍ ‏ ‏دَحْيَةُ بْنُ خَلِيفَةَ ‏

“இறைத்தூதர்கள் எனக்கு (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) காட்டப்பட்டனர். மூஸா (அலை)  ‘ஷனூஆ’ குலத்து ஆண்களை ஒத்த உயரமானவராக இருந்தார்கள். மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு(எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) (என் தோழர்) தஹ்யா பின் கலீஃபா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 243

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا عِنْدَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

فَذَكَرُوا ‏ ‏الدَّجَّالَ ‏ ‏فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ قَالَ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ ‏ ‏أَمَّا ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ وَأَمَّا ‏ ‏مُوسَى ‏ ‏فَرَجُلٌ آدَمُ ‏ ‏جَعْدٌ ‏ ‏عَلَى جَمَلٍ أَحْمَرَ ‏ ‏مَخْطُومٍ ‏ ‏بِخُلْبَةٍ ‏ ‏كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذَا انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது தஜ்ஜாலைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். அப்போது, “நான் அவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களது உருவ அமைப்பை அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை(என்னை)ப் பாருங்கள். மூஸா (அலை) மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணிப்பார்கள். அவர்கள் தல்பியா கூறியபடி இந்த (அல்-அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியதை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 242

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَالْمَدِينَةِ ‏ ‏فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ ‏ ‏أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا ‏ ‏وَادِي الْأَزْرَقِ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعَرِهِ شَيْئًا لَمْ يَحْفَظْهُ ‏ ‏دَاوُدُ ‏ ‏وَاضِعًا إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ ‏ ‏جُؤَارٌ ‏ ‏إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي قَالَ ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ فَقَالَ أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ قَالُوا ‏ ‏هَرْشَى ‏ ‏أَوْ ‏ ‏لِفْتٌ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏يُونُسَ ‏ ‏عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ ‏ ‏خِطَامُ ‏ ‏نَاقَتِهِ لِيفٌ ‏ ‏خُلْبَةٌ ‏ ‏مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், “மூஸா (அலை) தம் இரு விரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்று கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்து சேர்ந்தோம். அப்போது “இது எந்த மலைக் குன்று?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். மக்கள், ‘ஹர்ஷா’ அல்லது ‘லிஃப்து’ என்று பதிலளித்தனர். அப்போது, “யூனுஸ் (அலை) நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஈச்சநாரால் கடிவாளம் இடப்பட்ட ஒரு சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்து சென்றதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

மூஸா (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிப்பாளர் தாவூத் (ரஹ்) அவர்களின் நினைவிலில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 241

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ ‏ ‏بِوَادِي الْأَزْرَقِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا هَذَا ‏ ‏وَادِي الْأَزْرَقِ ‏ ‏قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏هَابِطًا مِنْ ‏ ‏الثَّنِيَّةِ ‏ ‏وَلَهُ ‏ ‏جُؤَارٌ ‏ ‏إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ ثُمَّ أَتَى عَلَى ‏ ‏ثَنِيَّةِ هَرْشَى ‏ ‏فَقَالَ أَيُّ ‏ ‏ثَنِيَّةٍ ‏ ‏هَذِهِ قَالُوا ‏ ‏ثَنِيَّةُ هَرْشَى ‏ ‏قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏يُونُسَ بْنِ مَتَّى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏عَلَى نَاقَةٍ حَمْرَاءَ ‏ ‏جَعْدَةٍ ‏ ‏عَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ ‏ ‏خِطَامُ ‏ ‏نَاقَتِهِ ‏ ‏خُلْبَةٌ ‏ ‏وَهُوَ يُلَبِّي ‏


قَالَ ‏ ‏ابْنُ حَنْبَلٍ ‏ ‏فِي حَدِيثِهِ قَالَ ‏ ‏هُشَيْمٌ ‏ ‏يَعْنِي لِيفًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பயணத்தில்) ‘அல்-அஸ்ரக்’ பள்ளத்தாக்கைக் கடந்து சென்றபோது, “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தார்கள். “மூஸா (அலை) உரத்த குரலில் தல்பியா சொல்லிக் கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றின் பக்கம் சென்றபோது, “இது எந்த மலைக் குன்று?” என்று கேட்டார்கள். மக்கள், “(இது) ஹர்ஷா மலைக் குன்று” என்று பதிலளித்தனர். “யூனுஸ் பின் மத்தா (அலை) நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஒரு திடமான சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொல்லிக் கொண்டிருந்ததை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 240

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَمِّ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَرْتُ لَيْلَةَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِي عَلَى ‏ ‏مُوسَى بْنِ عِمْرَانَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏رَجُلٌ ‏ ‏آدَمُ ‏ ‏طُوَالٌ ‏ ‏جَعْدٌ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ ‏ ‏عِيسَى ابْنَ مَرْيَمَ ‏ ‏مَرْبُوعَ ‏ ‏الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَأُرِيَ ‏ ‏مَالِكًا ‏ ‏خَازِنَ النَّارِ ‏ ‏وَالدَّجَّالَ ‏ ‏فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ ‏
‏فَلَا تَكُنْ فِي ‏ ‏مِرْيَةٍ ‏ ‏مِنْ لِقَائِهِ ‏


‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏يُفَسِّرُهَا أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ لَقِيَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام

“நான் (விண்ணேற்றப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் மகன் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள் முடியுடையவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பு-வெண்மை கலவையான சருமம் கொண்டவர்களாகவும் படிந்து தொங்கும் தலைமுடியுடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும் தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். அவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை” என்பதோடு, “நீங்கள் அவரைச் சந்தித்ததில் ஐயம் கொள்ள வேண்டாம்” (32:23) என்ற இறைவசனத்தை மேற்கோள் காட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

மேற்கண்ட (32:23 ஆவது) வசனத்திற்கு, “நபி (ஸல்) மூஸா (அலை) அவர்களை (விண்ணேற்றத்தின்போது) சந்தித்ததைப் பற்றி நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம்” என்று கத்தாதா (ரஹ்) விளக்கமளித்தார்.

அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 239

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْعَالِيَةِ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏ابْنُ عَمِّ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏:‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِهِ فَقَالَ ‏ ‏مُوسَى ‏ ‏آدَمُ ‏ ‏طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَقَالَ ‏ ‏عِيسَى ‏ ‏جَعْدٌ ‏ ‏مَرْبُوعٌ ‏ ‏وَذَكَرَ ‏ ‏مَالِكًا ‏ ‏خَازِنَ جَهَنَّمَ وَذَكَرَ ‏ ‏الدَّجَّالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் விண்ணேற்றம் குறித்து நினைவு கூர்ந்தபோது, “மூஸா (அலை) மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று உயரமானவர்கள்” என்றும் “ஈஸா (அலை) சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்” என்றும் நரகத்தின் காவலரான மாலிக்கைப் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)